தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தெருநாய்கள் தொல்லை
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளையும், பொதுமக்களையும் அச்சுறுத்தி வருவதினால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
கழிவுநீர் வடிகால் அமைக்க கோரிக்கை
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியம், அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட முகமதுபட்டினம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஆனால் பாதி தெருக்களில் கழவுநீர் வடிகால் வசதி இல்லை. இதனால் வீடுகளில் வெளியேறும் கழிவுநீர் தெருவில் ஓடுகிறது. மேலும் மழைக்காலங்களில் கழிவுநீருடன் மழைநீர் சேர்ந்து ஓடுவதால் தூர்நாற்றம் ஏற்படுவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. ஏற்கனவே தெருக்களில் போடப்பட்ட வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கியும் வருகிறது. எனவே ஊராட்சி நிர்வாகம் வடிகால் வசதி இல்லாத தெருக்களில் புதிதாக கழிவுநீர் வடிகால் அமைக்கவும், ஏற்கனவே உள்ள வடிகால்களில் அடைப்புகளை எடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சமுதாய நலக்கூடத்தை சுற்றி ஆக்கிரமிப்பு
பெரம்பலூர் நகராட்சி 19-வது வார்டுக்கு உட்பட்ட சங்குபேட்டையில் சமுதாய நலக்கூடம் உள்ளது. ஆனால் அந்த சமுதாய நலக்கூடத்தை சுற்றி ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் சமுதாய நலக்கூடத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு பொதுமக்களால் வரமுடிவதில்லை. மேலும் அந்த வழியாகவும் வாகன ஓட்டிகள் செல்வதற்கு இடையூறாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் சமுதாய நலக்கூடத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
கோவில் நிலத்தில் கொட்டப்படும் கழிவுகள்
பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உழவர் சந்தை உள்ள பகுதியில் பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோவிலுக்கு சொந்தமான பல ஏக்கர் பரப்பிலான நிலம் உள்ளது. கடந்த 40 ஆண்டுக்கு மேலாக பயன்படுத்தப்படாமல் உள்ள இந்த கோவில் நிலத்தில் தற்போது இறைச்சிக் கழிவுகள், வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பை கூளங்கள், இறந்தவர்கள் உயிருடன் இருந்தபோது பயன்படுத்திய மெத்தைகள், துணிமணிகள் மற்றும் பல்வேறு குப்பை கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் கோவில் நிலம் முழுவதும் புதர்கள் மண்டியும், குப்பை கழிவுகளாலும் சுற்றுச்சூழல் சீர்கேடு அடைந்துள்ளது. இவற்றை கோவில் நிர்வாகம் அகற்றிவிட்டு சுற்றிலும் முள்வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
அகற்றப்படாத பதாகைகள்
பெரம்பலூர் மாவட்டம், களரம்பட்டியில் 3 நாட்கள் கோவில் திருவிழா என்று சாலையை மறைக்கும் வண்ணம் இருபுறமும் விளம்பர பதாகைகள் வைத்தனர். திருவிழா முடிந்தும் இன்னும் அதனை அகற்றாமல் உள்ளதால், களரம்பட்டியில் இருந்து செல்லும் வாகன ஓட்டுனர்களுக்கு நெடுஞ்சாலையில் வரும் வாகனம் தெரிவதில்லை. இதனால் விபத்து ஏற்படும் சூழல் இருப்பதால் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.