தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-09-13 19:20 GMT

வேகத்தடை அமைக்க வேண்டும்

திருச்சி மாநகராட்சி, பீமநகர் தேவர் புது தெருவில் ஏராளமான குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இப்பகுதியில் விளையாடும்போது இந்த வழியாக செல்லும் வாகனங்கள் வேகமாக செல்வதினால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆபத்தான சாக்கடை மூடி

திருச்சி- மலைக்கோட்டை, வடக்கு உள்வீதி பஜனை மடம் அருகே சாலையின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்கால் மூடி சேதமடைந்த நிலையில் உள்ளது. நடந்து செல்லும் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை சேதமடைந்துள்ள சாக்கடை மூடியின் மீது நடக்கும்போது, சாக்கடைக்குள் விழும் அபாய நிலை உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன்பு இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வீடுகளுக்குள் புகும் மழைநீர்

திருச்சி மாவட்டம், வயலூர் ரோடு எம்.எம். நகரின் முகப்பில் இருந்து உய்யகொண்டான் ஆற்றில் சேரும் மழைநீர் கால்வாய் ஆக்ரமிப்பால் தண்ணீர் செல்லும் வழியில் உள்ள இடம் மிகவும் இடைஇடையே மேடாக உள்ளது. இதனால் மழை பெய்யும்போது மழைநீர் செல்ல வழியின்றி எம்.எம்.நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து விடுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பாதியில் நிற்கும் பள்ளி கட்டிடப்பணிகள்

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், ஆலத்துடையான்பட்டி ஊராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் பள்ளி விரிவாக்கப்பணிகளுக்காக புதிய கட்டிடப்பணிகள் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுமார் 200 மாணவர்கள் கல்வி பயிலும் இப்பள்ளியில், ஒரு வருட காலமாகியும் பணிகள் நிறைவு பெறாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பள்ளியின் கட்டிடப்பணிகளை முடித்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

புதுப்பிக்கப்படாத சாலை

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், கோட்டப்பாளையம் ஊராட்சி பழைய மின்அலுவலகத்தை ஒட்டியுள்ள ரெட்டியார் தெருவை புல் பூண்டுகள் ஆக்கிரமித்து, பராமரிப்பின்றி மழைநீர் தேங்கியுள்ளது. ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகாரளித்தும், நடவடிக்கை ஏதுமில்லாததால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை புதுப்பித்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

சுவரொட்டிக்கு தடை விதிக்கப்படுமா?

திருச்சி மாவட்டத்தில் உள்ளது மண்ணச்சநல்லூர் வட்டம். இதன் கீழ் சுமார் 50 வருவாய் கிராமங்கள் உள்ளன. இதற்காக தமிழக அரசின் சார்பில் மண்ணச்சநல்லூர்-துறையூர் சாலையில் வட்டாட்சியர் அலுவலகம் பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தினம்தோறும் பொதுமக்கள் அரசின் திட்டங்களை பெறுவதற்காகவும், தெரிந்து கொள்வதற்காகவும் வருகின்றனர். வட்டாட்சியர் அலுவலக நுழைவு வாயில் மற்றும் சுற்றுப்புற சுவர் ஆகிய இடங்களில் கண்ணீர் அஞ்சலி, விளம்பர சுவரொட்டிகள் ஒட்டி உள்ளார்கள். இதனால் வட்டாட்சியர் அலுவலக வாயில் சுவரொட்டி ஒட்டும் இடமாக மாறி வருகிறது. வட்டாட்சியர் அலுவலகம் வரும் பொதுமக்கள் நாம் இடம் மாறி வந்து விட்டோமோ என்ற சிந்தனை அவர்களின் மனதில் தோன்றுகிறது. எனவே மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக சுவரொட்டி ஒட்டாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

Tags:    

மேலும் செய்திகள்