தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சேறும், சகதியுமான சாலை
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள இடையாறு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள மண் சாலைகள் தற்போது பெய்த மழையின் காரணமாக சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
குண்டும், குழியுமான சாலை
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள கழுமங்கலம் கிராமத்தில் இருந்து நாகல்குழி செல்லும் தார் சாலை போடப்பட்டு சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தற்போது அந்த சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சிதறும் மண்களால் வாகன ஓட்டிகள் அவதி
அரியலூர்-ஜெயங்கொண்டம் செல்லும் முதன்மை சாலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ளது. இதன் வழியாக தினமும் சிமெண்டு ஆலைகளுக்கு டிப்பர் லாரிகள் அதிகளவில் சென்று வருகிறது. இந்நிலையில் இங்கு முதன்மை சாலையில் அமைந்துள்ள செண்டர் மீடியனில் அதாவது கலெக்டர் அலுவலகம் முதல் பஸ் நிலையம் வரை மணல் மற்றும் சுண்ணாம்புக்கல் மண்கள் தேங்கி மேடாக உள்ளது. மேற்படி மண்கள் இவ்வழியே செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்த்து விடுகிறது. சில சமயங்களில் விபத்துகளும் ஏற்பட்டு விடுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்படுமா?
அரியலூர் பஸ் நிலையத்தின் வடக்கு பகுதியில் ஒரே வளாகத்தில் போலீஸ் நிலையம், வட்டாட்சியர் அலுவலகம், சார் நிலை கருவூலம், தீயணைப்பு நிலையம், கிளை சிறை மற்றும் ஆவின் பாலகம் ஆகியவைகள் செயல் பட்டு வருகிறது. மேற்சொன்ன அலுவலகங்களுக்கு பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். அரியலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகம் இரவு நேரங்களில் மிகுந்த இருளில் சிக்கி தவிக்கிறது. போதிய வெளிச்சம் இல்லை. அங்கு இருக்கும் மின்கம்பத்தில் தெரு விளக்கோ அல்லது உயர் மின் கோபுரம் இல்லை. பொதுமக்கள் இரவு நேரங்களில் போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க செல்லும் பொதுமக்களும், கைதிகளை கைது செய்து அரியலூர் கிளை சிறையில் ஒப்படைக்கும் போலீசார்கள் இருளை கடந்து தான் செல்கின்றனர். இந்த அவலநிலை பல ஆண்டுகளாக தொடர்கிறது. மேலும் இரவு நேரங்களில் சிலர் மது அருந்திவிட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் சுற்றித்திரிகின்றனர். மேற்கண்ட பகுதிகளில் அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்புறம் உயர் மின்கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பஸ் நிறுத்த வசதி இல்லை
அரியலூர் மாவட்டம், விளாங்குடியில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு பல கிராமங்களை சேர்ந்த கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்கள், நோயாளிகள் வருகின்றனர். ஆனால் இந்த மருத்துவமனைக்கு பஸ் நிறுத்த வசதி இல்லை. இதனால் நோயாளிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.