தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-08-19 19:32 GMT

சிதிலமடைந்த படிக்கட்டுகள்

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள சேமங்கி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்களின் நலன் கருதி பல ஆண்டுகளுக்கு முன்பு புகழூர் வாய்க்காலில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டது. அங்கு சேமங்கி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சலவை தொழிலாளர்கள் புகழூர் வாய்க்காலுக்கு வந்து குளித்தும், அழுக்குத் துணிகளை துவைத்தும் சென்று வருகின்றனர். இந்நிலையில் புகழூர் வாய்க்காலில் குளிப்பதற்காக வரும் பொதுமக்கள் சிதிலமடைந்த படிக்கட்டுகளில் இறங்கும் போது நிலை தடுமாறி வாய்க்காலுக்குள் விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், சேமங்கி.

நோயாளிகள் அவதி

கரூர் மாவட்டம், நொய்யல் பகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது. இந்த துணை சுகாதார நிலையத்திற்கு ஒரு செவிலியரை நியமனம் செய்யப்பட்டு அந்த செவிலியர் அங்கேயே தங்கி இருந்து சுகாதார நிலையத்திற்கு வரும் அனைத்து நோயாளிகளுக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்து மாத்திரைகளை வழங்கி வந்தார். இந்நிலையில் சுகாதார நிலையம் கட்டப்பட்டு சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் சுகாதார நிலையம் பழுதடைந்தது.இதன் காரணமாக சுகாதார நிலையத்தில் இருந்த அனைத்து பொருட்களையும் எடுத்து மாற்று இடத்தில் வைத்து விட்டனர். இந்நிலையில் சுகாதார நிலையம் மிகவும் பழுது அடைந்துள்ளதால் எந்த நேரத்திலும் விழுந்து விபத்து ஏற்படும் நிலையில் இருந்ததன் காரணமாக சுகாதார நிலையத்தை பயனற்றதாக ஆக்கிவிட்டனர். இதனால் நொய்யல் சுற்று வட்டாரப்பகுதியை சேர்ந்த ஏராளமான நோயாளிகள் சுமார் 6 கிலோ மீட்டருக்கு மேல் உள்ள வேலாயுதம்பாளையம் பகுதிக்கும், ஓலப்பாளையம் பகுதிக்கும் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே இதுகுறித்து சுகாதாரத்துறை மேல் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ராம், நொய்யல்.

டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை

கரூர் மாவட்டம், தவிட்டுப்பாளையம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து புகழூர் நான்கு ரோடு, தோட்டக்குறிச்சி வழியாக தளவாப்பாளையம் செல்லும் தார் சாலை ஓரத்தில் அய்யம்பாளையம் பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அரசு டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டது. தார் சாலை ஓரத்தில் டாஸ்மார்க் கடை இருப்பதால் ஏராளமான மதுப்பிரியர்கள் மது பாட்டில்களை வாங்கி தார் சாலை ஓரத்தில் அமர்ந்து மதுவை அருந்திவிட்டு அவர்கள் கொண்டுவந்துள்ள உணவுப் பொருட்களை சாப்பிட்டு விட்டு பாட்டில்களை அங்கே உடைத்து போட்டுவிட்டு மது போதையில் அங்கேயே இருக்கின்றனர். இதனால் மாலை நேரங்களில் பெண்கள் இந்த வழியாக செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தேவையற்ற முறையில் மது போதையில் அந்த வழியாக செல்பவர்களை நிறுத்தி தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், புகழூர்.

நிழற்குடை அமைக்கப்படுமா?

கரூர் மாவட்டம், நொய்யல் முதல் வேலாயுதம்பாளையம் வரை உள்ள பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் வெயில் காலத்தில் வெயிலில் நின்றும், மழை காலத்தில் மழையில் நனைந்தும் பஸ்களில் ஏறி சென்று வருகின்றனர். இது குறித்து உள்ளாட்சித்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் தொடர்ந்து பயணிகள் அவதியுற்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தமிழரசன், நொய்யல்.

சீரமைக்கப்படாத சுகாதார வளாகம்

கரூர் மாவட்டம், கந்தம்பாளையம் அருகே உள்ள காந்தி நகர் பகுதியில் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் நிலைய அலுவலருக்கான அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இந்த குடியிருப்பு வளாகத்திற்குள் தீயணைப்பு வீரர்கள் மற்றும் நிலைய அலுவலர் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் தீயணைப்பு வீரர்களுக்கான குடியிருப்பு வளாகத்திற்கு முன் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்த சுகாதார வளாகத்தை அப்பகுதியை சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் சுகாதார வளாகம் சிதிலமடைந்து கழிவுநீர் வெளியேறாமல் நின்றதால் சுகாதார வளாகத்தை பயன்படுத்தாமல் இருந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சத்தியவேல், காந்தி நகர்.

Tags:    

மேலும் செய்திகள்