தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
வாகன ஓட்டிகளை கடிக்க வரும் தெருநாய்கள்
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை கடிக்க துரத்துவதினால் அவர்கள் பயத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சுற்றுச்சுவர் அமைக்கப்படாத மின்மயானம்
அரியலூரில் உயிரிழப்பவர்களின் உடல்களை தகனம் செய்யும் வகையில் அரியலூரில் மின் மயானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் மயானத்தைச் சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்படாமல் உள்ளதால் இரவு நேரத்தில் மதுப்பிரியர்கள் மது அருந்துவதும், சட்ட விரோத செயல்களும் நடக்கிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மின் மயானத்தைச் சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பெயர்ந்து கிடக்கும் கற்களால் மக்கள் அவதி
அரியலூர் நகராட்சி அலுவலகம் செல்லும் பாதையில் கற்கள் பதியப்பட்டுள்ளன. இந்த கற்கள் ஆங்காங்கே பெயர்ந்து காணப்படுவதினால் வாகன ஓட்டிகளும், நகராட்சி அலுவலகத்திற்கு நடந்து வரும் பொதுமக்களும் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த பாதையில் பெயர்ந்துள்ள கற்களை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பராமரிக்கப்படாத விளையாட்டு அரங்கம்
அரியலூரில் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தை காலை, மாலை நேரங்களில் பொதுமக்கள் அதிக அளவில் வருகை தந்து நடைப்பயிற்சி செல்லவும், இளைஞர்கள் விளையாடவும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த விளையாட்டு அரங்கம் பராமரிப்பு இன்றி உள்ளதால் பொதுமக்களும், இளைஞர்களும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அரியலூர் விளையாட்டு அரங்கத்தை சீரமைப்பு செய்வதுடன் பொதுமக்களுக்கு மேலும் தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ஆபத்தான நீர்த்தேக்க தொட்டி
அரியலூர் வட்டம், புதுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட நெரிஞ்சிக்கோரை கிராமத்தின் ஊரின் நடுத்தெருவில் பாலர் பள்ளி அமைந்துள்ளது. அதன் அருகாமையில் பழைய உபயோகத்தில் இல்லாத மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் பழங்கால கிணறும் உள்ளது . இவையனைத்தும் பாலர் பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு ஆபத்தானதாக உள்ளதால் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இதனை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.