தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-08-13 18:02 GMT

தாமதமாக நடக்கும் வடிகால் அமைக்கும் பணி

திருச்சி விமான நிலையம் வயர்லெஸ் சாலையோரத்தில் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி காலதாமதமாக நடைபெறுவதால் இரவு நேரத்தில் இந்த பள்ளத்தில் கால்நடைகள், மதுப்பிரியர்கள் தவறி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சாலை சந்திப்புகளில் பெயர் பலகை வைக்க வேண்டும்

வாகனப் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையிலும், மக்களின் பயண நேரத்தை குறைக்கும் வகையிலும் திருச்சியில் இருந்து துறையூர் செல்லும் சாலையில் உள்ள அத்தானியிலிருந்து மண்ணச்சநல்லூர் தாலுகா அலுவலகம் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் புறவழிச் சாலை அமைக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திறந்து வைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. உளுந்தங்குடி அருகே செல்லும்போது அந்தப் பகுதியில் இருந்து மண்ணச்சநல்லூர் நகரம், திருப்பைஞ்சீலி சிவன் கோவில், துறையூர், திருச்சி ஆகிய ஊர்களுக்கு செல்லும் சாலை பிரிகிறது. வெளியூரிலிருந்து வரும் வாகன ஓட்டிகள் அவர்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு எந்த வழியில் செல்ல வேண்டும் என்று திசை தெரியாமல் அங்கு உள்ளவர்களிடம் கேட்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அந்த பகுதி ரவுண்டானா அருகே எந்த ஊர்களுக்கு எவ்வழியே செல்ல வேண்டும் என்ற ஊர் பெயர் பலகையை வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆபத்தான துணை சுகாதார நிலையம்

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், கீழக்குன்னுப்பட்டியில் உள்ள துணை சுகாதார நிலையம் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இந்த சுகாதார நிலையத்திற்கு ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் இந்த கட்டிடம் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இடைந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

திருச்சி மாவட்டம், எம்.புதுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு பகுதியில் தார் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்து வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தார் சாலை அமைக்கும் பணியை தொடங்கியுள்ளனர். இதற்கு இப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்து அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

சாலையோரம் கொட்டப்பட்டுள்ள மண்

திருச்சி மாவட்டம், நெ.1 டோல்கேட் பெட்ரோல் பங்க் அருகில் பாசன வாய்க்கால்களில் தூர்வாரப்பட்ட மண் சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ளது. இந்த மண் அகற்றப்படாமல் உள்ளதால் இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

Tags:    

மேலும் செய்திகள்