தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-08-13 17:59 GMT

சாலையின் நடுவே பள்ளம்

கரூர் மாவட்டம், திருமாநிலையூரில் திருச்சி செல்லும் சாலையின் நடுவே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்தப்பள்ளம் மூடப்படாமல் உள்ளதால் இரவு நேரத்தில் இந்த சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வீணாகும் குடிநீர்

கரூர் மாவட்டம், பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பிரம்ம தீட்ச சாலையின் ஓரத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணாகி சாலையின் நடுவே ஓடுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் தண்ணீர் சாலையில் ஓடுவதினால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ரெயில்வே குகைவழிப்பாதை அமைக்க வேண்டும்

கரூர் மாவட்டம் நொய்யல் அருகே மரவாபாளையத்தில் இருந்து அந்த வழியாக செல்லும் ரெயில்வே பாதையை கடந்து மதுரை வீரன் நகர், மகாத்மாகாந்திநகர், நாடார் புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்பவர்கள் மரவபாளையம் ரெயில்வே பாதை வழியாக கடந்து சென்று வருகின்றனர். அதேபோல் மதுரை வீரன் நகர், மகாத்மா காந்தி நகர், நாடார்புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் மரவாபாளையத்தில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளி, அங்குள்ள துணை சுகாதார நிலையம், நொய்யலில் உள்ள ஈ.வே.ரா. பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கும் இந்த ரெயில்வே பாதையை கடந்து வருகின்றனர். மதுரை வீரன் நகர், மகாத்மா காந்தி நகர், நாடார் புரம் பகுதியில் திடீரென எவருக்காவது உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டால் இந்த பாதையின் வழியாக எந்த வாகனமும் செல்ல முடியாததால் புங்கோடையில் உள்ள குகை வழி பாதை வழியாக சென்று வரவேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் வெகு தூரம் சென்று வர வேண்டியது உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வாய்க்காலில் தண்ணீர் செல்ல தடை

கரூர் மாவட்டம், பாலத்துறை வழியாக புகழூர் வாய்க்கால் செல்கிறது. பாலத்துறை அருகே சேலம்-கரூர், கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. நெடுஞ்சாலையின் கீழே பாலம் உள்ளது. இந்தப்பாலத்தில் ஏராளமான தண்ணீர் தாமரைகள் மற்றும் பல்வேறு செடி-கொடிகள் தண்ணீரில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக வாய்க்காலில் செல்லும் தண்ணீர் விரைந்து செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது .எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாலத்தின் அடியில் தேங்கியுள்ள தண்ணீர் தாமரை மற்றும் பல்வேறு செடி கொடிகளை அகற்றி தங்கு தடை இன்றி வாய்க்காலில் தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம் அருகே புன்னம் பகுதியில் மளிகை கடைகள், டீக்கடைகள் என பல்வேறு கடைகள் உள்ளன. இக்கடைகளில் உள்ள பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள், கப்புகள், அழுகிய காய்கறிகளை தார் சாலையின் ஓரத்தில் கொட்டி வருகின்றனர். அதேபோல் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளையும், பல்வேறு கழிவுகளையும் கொட்டி வருகின்றனர். இதனால் தார் சாலை ஓரத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டிக் கிடக்கின்றன. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குண்டும், குழியுமான சாலை

கரூர் மாவட்டம், திருக்காடுதுறை ஊராட்சி வேலாயுதம்பாளையம்- நொய்யல் செல்லும் மெயின் ரோடு ஆலமரத்து மேடு பகுதியில் இருந்து கரைப்பாளையம் தங்காயி அம்மன் கோவிலுக்கு செல்வதற்காக மண் பாதை போடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த சாலையில் பாதி வரை தார் சாலை போடப்பட்டுள்ளது. மீதி உள்ள மண் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. எனவே உள்ளாட்சித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமாக உள்ள மண் சாலையை சீரமைத்து தார்சாலையாக மாற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

Tags:    

மேலும் செய்திகள்