தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தெருநாய்கள் தொல்லை
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், தெரணி கிராமத்தில் உள்ள வடக்கு தெருவில் நாய்கள் அதிகமாக காணப்படுகிறது. இவை சாலையில் செல்பவர்களை கடிக்க வருவதினால் இப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தடுப்பு சுவர் இல்லாத கிணறு
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அன்னமங்கலம் ஊராட்சி அரசலூர் பஸ் நிறுத்தம் அருகே சாலை ஓரத்தில் தனியார் விவசாய கிணறு உள்ளது. இந்த கிணற்றை சுற்றி தடுப்பு சுவர் இல்லாததால் அந்த வழியாக வரும் வாகனங்கள் நிலை தடுமாறி கிணற்றுக்குள் விழும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து சாலை ஓரத்தில் உள்ள கிணற்றை சுற்றி தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
குப்பைகள் அள்ளப்படுவதில்லை
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் குவியும் குப்பைகள் சேகரிப்பட்டு ஒரு இடத்தில் தொட்டிகளில் வைக்கப்படுகிறது. ஆனால் நகராட்சி சார்பில் அந்த குப்பைகள் உடனடியாக அள்ளப்படுவதில்லை. இதனால் குவிந்து இருக்கும் குப்பைகளை அங்கு சுற்றித்திரியும் குரங்குகள் உணவு பொருட்கள் ஏதும் இருக்கிறதா? என்று கிளறி விட்டு அலங்கோலமாக்கி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சேகரிக்கப்படும் குப்பைகளை உடனடியாக அள்ளுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பர பதாகைகள்
பெரம்பலூர் நகர்ப்பகுதியில் தற்போது நகராட்சி, போலீசார் அனுமதியின்றி விளம்பர பதாகைகள் ஆங்காங்ேக வைக்கப்பட்டு வருகிறது. மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக சில இடங்களில் வைக்கப்படும் விளம்பர பதாகைகளால் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனுமதியின்றி விளம்பர பதாகை வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
கொசு ஒழிப்பு மருந்து அடிக்கப்படுமா?
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா குரும்பபாளையம் கிராமத்தில் இரவு நேரத்தில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் கூலி வேலைக்கு செல்லும் கூலி தொழிலாயர்கள் இரவு நேரத்தில் நிம்மதியாக தூங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இதனால் மர்ம காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.