தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குடிநீர் இன்றி மக்கள் அவதி
திருச்சி தெப்பக்குளம் வானப்பட்டரை தெரு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், தெப்பக்குளம், திருச்சிராப்பள்ளி.
போக்குவரத்திற்கு இடையூறு
திருச்சி ஜங்ஷன் பகுதியில் இரவு நேரத்தில் சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் ஒரு சில கால்நடைகள் சாலையின் நடுவே படுத்துக்கொள்வதினால் மோட்டார் சைக்கிள் செல்பவர்கள் இதனை கவனிக்காமல் நிலைதடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், திருச்சி ஜங்ஷன்.
வெறிநாய்களால் மக்கள் அச்சம்
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், புள்ளம்பாடி ஒன்றியம் மேலரசூர் கிராமத்தில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவற்றில் ஒரு சில நாய்கள் வெறிபிடித்து அப்பகுதியில் சாலையில் நடந்து செல்பவர்களை கடித்து குதறுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்புகூட சாலையில் நடந்து சென்ற ஒரு பெண்ணை வெறி நாய்கள் கடித்துக்குதறியதால் அந்தப் பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
அங்கமுத்து, மேலரசூர்.
அடிப்படை வசதிகளை சரிசெய்ய வேண்டும்
திருச்சி மாவட்டம், துறையூர்-திருச்சி சாலையில் உள்ள புதிய வீட்டு வசதி வாரியக்குடியிருப்பில் சுமார் 350 வீடுகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு போட்ட சாலைகள். குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் கழிவுநீர் வாய்க்காலின் மூடிகள் சிதிலமடைந்து காணப்படுகிறது. இப்பகுதியில் உள்ள நீர்த்தேக்க தொட்டி பயனற்று உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
மணிவண்ணன், துறையூர்.
தார் சாலை அமைக்கப்படுமா?
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி திருப்பைஞ்ஞீலி ஊராட்சி வாழ்மால்பாளையம் கீழூரில் இருந்து கொண்டான் தெரு வரை செல்லும் மண் சாலை மழை பெய்யும்போது சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சுரேஷ் குமுதா, வாழ்மால்பாளையம் கீழூர்.