தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-07-28 18:43 GMT

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குளங்கள் மற்றும் ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் அதிக அளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் இப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் ஆண்டுக்கு, ஆண்டு சுருங்கி வருகிறது. மேலும் நீர்நிலைகளுக்கு செல்லும் வரத்து வாரிகளும் தூர்ந்துபோன நிலையிலும், ஒரு சில இடங்களில் வரத்து வாரிகள் இருந்ததற்கான அடையாளம் கூட இல்லாமலும் காணப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிப்பதுடன் பொதுமக்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காத நிலையும் ஏற்படும். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், வடகாடு.

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே உள்ள வம்பன்நால்ரோடு ஆலங்குடி மெயின் ரோட்டில் உள்ள வயல் பகுதியில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றது. விவசாய தொழிலாளர்கள் விவசாய பணியில் ஈடுபடும்போது அவர்கள் மீதோ அல்லது உழவு எந்திரங்கள் மீதோ இந்த மின்கம்பிகள் பட்டால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், வம்பன்நால்ரோடு.

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

புதுக்கோட்டை மாவட்டம், 9ஏ நத்தம் பண்ணை ஊராட்சிக்கு உட்பட்ட பாலன் நகர், கருவேப்பிலையான், ரெயில்வே கேட், ஐ.டி.ஐ. காலனி ஆகிய பஸ் நிறுத்தங்களில் காலை, மாலை வேளைகளில் பயணிகளின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்படுகிறது. மேற்கண்ட வழித்தடத்தில் குறைந்த அளவு பஸ்கள் இயக்கப்படுவதினால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படியில் தொங்கிக்கொண்டு பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் படியில் இருந்து தவறி விழும் நிலை உள்ளது. எனவே உயிரிழப்பு ஏற்படும் முன்பு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மேற்கண்ட வழித்தடத்தில் கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், மருதுபாண்டியர் நகர்.

குண்டும், குழியுமான சாலை

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள வலையப்பட்டி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனை சாலை பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் உள்ளதால், தற்போது குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மீனாட்சி சுந்தரம், வலையப்பட்டி.

கால்நடை மருத்துவமனை வேண்டும்

புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே உள்ள மேலத்தானியத்தை சுற்றி சூரப்பட்டி, வடக்கிப்பட்டி, எம்.உசிலம்பட்டி, ஆவாம்பட்டி, வெள்ளையக்கவுண்டம்பட்டி, அம்மாபட்டி, பில்லனிவயல், முள்ளிப்பட்டி, கீழத்தானியம், இடையம்பட்டி உள்பட 15-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் ஆடு, மாடு, கோழி, நாய்கள் என அதிக அளவில் வளர்த்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட கால்நடைகளை கிச்சைக்காக காரையூர் அல்லது சடையம்பட்டி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே கால்நடை வளர்ப்பவர்களின் கஷ்டத்தை போக்கவும், கால்நடைகளை பாதுகாக்கவும் மேலத்தானியத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், மேலத்தானியம்.

Tags:    

மேலும் செய்திகள்