தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-07-26 18:10 GMT

சிதிலமடைந்த ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை அருகே உள்ள குப்பையன்பட்டி கிராம ஊராட்சியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கீழே விழுந்த நிலையில், கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் அச்சத்துடனே ஊராட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதனால் பழுதடைந்த ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தின் மேற்கூரையில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்த பகுதிகளை சரிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடிவழி தடத்தில் இரவு நேரத்தில் இயக்கப்படும் பஸ்கள் கடந்த சில மாதங்களாக இயக்கபடாதது குறித்தும், இதனால் மாணவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பயணிகள் பாதிக்கப்படுவது குறித்தும் தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து தற்போது கறம்பக்குடி வழிதடத்தில் இயக்கபடாமல் இருந்த பஸ்கள் இரவு நேரத்தில் இயங்க தொடங்கி உள்ளன. பொதுமக்களின் நலன் கருதி செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.

போக்குவரத்திற்கு தகுதியற்ற இணைப்பு சாலை

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு பின்புறமாக பர்மா காலனி வழியாக செரியலூர், வேம்பங்குடி செல்லும் இணைப்புச்சாலை கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பராமரிப்பின்றி ஜல்லி கற்கள் பெயர்ந்து போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. மழைக்காலத்தில் சாலையிலேயே மழைநீர் குளம்போல் தேங்கி நிற்பதால் மாணவர்கள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு தெற்குப்பட்டியில் சேதமடைந்த நிலையில் இருந்து வரும் மின் கம்பத்தை மாற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். இச்செய்தி 'தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரம் செய்யப்பட்டு இருந்தது. இதன் எதிரொலியாக வடகாடு மின் வாரிய அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக சேதமடைந்த மின் கம்பத்தை மாற்றி அதற்கு பதிலாக புதிய மின் கம்பத்தை மாற்றி அமைத்தனர். இதற்கு வடகாடு பகுதி பொதுமக்கள் விரைந்து நடவடிக்கை எடுத்த மின் வாரிய அலுவலர்களுக்கும், செய்தி பிரசுரம் செய்த 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கும் நன்றி தெரிவித்தனர்.

சாலைகளை சீரமைக்க கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம், வாராப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட வாராப்பூர் கம்மங்காடு இணைப்புச் சாலை மற்றும் சுந்த நெறிப்பட்டி கிராம சாலை 850 மீட்டர் மற்றும் இருங் குலவன் பட்டி கிராம சாலை, மேல புலவன்காடு கிராம சாலை, கீழ புளவங்காடு -மேல மஞ்ச கரை கிராம சாலை, புதுவயல் கிராம சாலை, விறியணி பட்டி கிராம சாலை, குறுக்க பட்டி மெட்டல் சாலை, கழனி பட்டி ராஜாத்தி அம்மன் கோவில் சாலை மற்றும் வளச்சேரி பட்டி மேல தெரு சாலை, தெற்கு கறை சாலை என மேற்கொண்ட சாலைகள் அனைத்தும் கஜா புயல் மற்றும் பல்வேறு பெரும் மழை மற்றும் புயல் காரணமாக வெகுவாக பாதிக்கப்பட்டு பொதுமக்கள், மாணவ-மாணவிகள், விவசாயிகள் சென்றுவர இயலாத நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படுமா?

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பேரூராட்சி 8-வது வார்டு திருவள்ளுவர் நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் இப்பகுதியில் முறையான கழிவுநீர் வாய்க்கால் வசதி இல்லை. இதனால் இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் குப்பைகளை முறையாக அகற்றுவது இல்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பயனற்ற பொது சுகாதார வளாகம்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், மலைக்குடிப்பட்டி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் தேவைக்காக இப்பகுதியில் பொது சுகாதார வளாகம் அமைக்கப்பட்டது. தற்போது இந்த பொது சுகாதார வளாகம் பராமரிப்பு இன்றி உபயோகமற்ற நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதி பெண்கள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த பொது சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சாலையோரத்தில் மரக்கன்றுகள் நட வேண்டும்

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை முதல் ஆலங்குடி வரை சாலையின் இருபுறமும் வெட்ட வெளிபோல் காட்சி அளிக்கிறது. எனவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது வாகன ஓட்டிகள் மரத்தின் நிழலில் நிற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையோரம் மரக்கன்றுகள் நடவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

Tags:    

மேலும் செய்திகள்