தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-07-25 18:12 GMT

சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்க வேண்டும்

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் வழியாக தினமும் எண்ணற்ற சிமெண்டு லாரிகள், சுண்ணாம்பு கல் லாரிகள், தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்கு ஜல்லிகற்கள் மற்றும் சிமெண்டு கலவைகள் ஆகியவைகளை ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்கள் ஏராளமாக செல்கின்றன. இதனால் வாலாஜா நகரத்தில் இருந்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வரை உள்ள இடைபட்ட பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. எனவே இதனை தடுக்க சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், அரியலூர்.

ஏரிகளில் மண் எடுப்பதற்கு கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏரிகளில் இருந்து வண்டல் மண்ணை விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களுக்கு எடுத்துக்கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் விவசாயிகளுக்கு அந்த அவகாசம் போதாததால் இப்பகுதியில் உள்ள நிறைய விவசாயிகள் ஏரிகளில் இருந்து மண்ணை விவசாய நிலங்களுக்கு எடுக்க முடியாமல் போய்விட்டது. எனவே மீண்டும் ஒருமுறை வாய்ப்பு வழங்கி விவசாயிகள் விவசாய நிலங்களுக்கு ஏரிகளில் இருந்து மண்ணை எடுப்பதற்கு கால அவகாசம் நீட்டிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

விவசாயிகள், விக்கிரமங்கலம்.

அஞ்சல் நிலையம் அமைக்கப்படுமா?

அரியலூர் பஸ் நிலையம் அருகே மாவட்ட நீதிமன்றம், வட்டாட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், கருவூலம், தீயணைப்புத்துறை மற்றும் மாவட்ட நூலகம் என பல்வேறு துறை அலுவலகங்கள் இயங்கி வருகிறது. மேற்படி அலுவலகங்களின் தபால்கள் அனுப்ப வேண்டும் என்றால் சத்திரம் எம்.டி. ஜி. நிலையத்திற்கு சென்று தான் அனுப்ப வேண்டிய நிலை இருந்து வருகிறது. மேற்படி அஞ்சல் நிலையத்தில் ஒரே கவுண்டரில் நீண்ட நேரம் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதோட அல்லாமல் அரியலூர் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் அமைந்துள்ள அனைத்து அரசு துறைகளின் கடிதங்களும் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து அரியலூர் எம்.டி.ஜி. அஞ்சல் நிலையத்திற்கு வந்து அனுப்ப வேண்டிய நிலைப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரியலூர் நகரின் மத்திய பகுதியான வட்டாட்சியர் அலுவலகம் அல்லது மாவட்ட நீதிமன்றம் அருகில் புதிய கிளை அஞ்சலகம் ஒன்று அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், அரியலூர்.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

அரியலூர் மாவட்டம், ஸ்ரீபுரந்தான் செக்கடி முதல் ஒட்டகோவில் வரை அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் மழை பெய்யும் போது மழைநீர் செல்ல வழியின்றி சாலையில் செல்கிறது. மேலும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பாண்டியன், ஸ்ரீபுரந்தான்.

முழுமையாக பயன்பாட்டிற்கு வராத உழவர்சந்தை

அரியலூர் உழவர் சந்தை முழுமையான பயன்பாடு இன்றி உள்ளது. தற்போது வியாபாரிகள் பெரும்பாலும் சாலையோரத்தில் தரைக்கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, அரியலூர் உழவர் சந்தையை முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், அரியலூர்.



Tags:    

மேலும் செய்திகள்