தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-07-11 18:52 GMT

சிதிலமடைந்து வரும் பாலம்

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு எல்லையோர பகுதியில் உள்ள செட்டிகுளம் பகுதியில் இரு ஊரை இணைக்கும் தரைப்பாலம் உள்ளது. கடந்த ஆண்டு பெய்த மழையால் இத்தரைப்பாலத்தை கடந்து சென்ற தண்ணீரால், இப்பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாது போக்குவரத்து முற்றிலும் முடங்கி இருந்தது. இதனையடுத்து இப்பாலத்தை மேம்பாலமாக மாற்ற வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தரைப்பாலத்தை பார்வையிட்டு சென்றதோடு சரி அதன் பின்னர் யாரும் கண்டு கொள்ளாததால் தற்சமயம், இத்தரைப்பாலம் தற்போது சிறிது சிறிதாக ஓட்டை விழுந்து சேதமடைந்த நிலையில் இருந்து வருகிறது. தரைப்பாலம் முழுவதும் சேதமடையும் முன்பு இதனை சீரமைத்து மேம்பாலமாக மாற்றம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், வடகாடு.

குண்டும், குழியுமான சாலை

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா, மறவன்பட்டி விலக்கு சாலையில் இருந்து கருப்பகோன் தெரு கிராமம் வரை செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், இருசக்கர வாகனங்களில் செல்வோர் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் அவரச தேவைக்காக 108 ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலையில் உள்ளது. இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் நிலைதடுமாறி பள்ளங்களில் விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கரிகாலன், கறம்பக்குடி.

Tags:    

மேலும் செய்திகள்