தினத்தந்தி' செய்தி எதிரொலி:திண்டுக்கல்-குமுளி சாலையோரம் வளர்ந்த முட்செடிகள் அகற்றம்:வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
தினத்தந்தி செய்தி எதிெராலியாக, திண்டுக்கல்-குமுளி சாலையோரம் வளர்ந்த முட்செடிகள் வெட்டி அகற்றப்பட்டன.
திண்டுக்கல்-குமுளி இடையே நான்கு வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு, நிலம் கையகப்படுத்தப்பட்டது. பின்னர், நான்கு வழிச்சாலைக்கு பதிலாக இருவழி புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. இதில் தேனி அருகே பூதிப்புரத்தில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடந்ததால் மதுராபுரியில் இருந்து போடி சாலை சந்திப்பு வரை போக்குவரத்து இயக்கப்படாமல் இருந்தது. இந்த பாலம் அமைக்கும் பணி நிறைவடைந்ததை தொடர்ந்து சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக இந்த சாலை போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது.
இந்த சாலையில் தற்போது தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. அதில் அடிக்கடி விபத்துகள் அரங்கேறி வருகின்றன. இதற்கு திண்டுக்கல்-குமுளி சாலையில் தேனி அருகே உப்புக்கோட்டை விலக்கில் இருந்து உப்பார்பட்டி விலக்கு வரை சாலையின் இருபுறங்களில் முட்செடிகள் வளர்ந்து இருப்பதே காரணம் ஆகும்.
இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் ஒதுங்கி செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விபத்தில் சிக்குகின்றனர். எனவே சாலையின் இருபுறங்களிலும் வளர்ந்து உள்ள முட்செடிகளை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்த செய்தி கடந்த மாதம் 8-ந்தேதி 'தினத்தந்தி'யில் வெளியானது. இதன் எதிரொலியாக, போக்குவரத்துக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து இருந்த முட்செடிகள் நேற்று முன்தினம் வெட்டி அகற்றப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.