'தினத்தந்தி'-ஜெயா கல்வி நிறுவனம் இணைந்து நடத்திய வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி: வேலை தேடுபவர்களாக இல்லாமல், வேலை கொடுப்பதற்கான திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும்

‘தினத்தந்தி', ஜெயா கல்வி நிறுவனம் இணைந்து நடத்திய வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருவள்ளூர் மாவட்ட கூடுதல் கலெக்டர் ரிஷப், வேலை தேடுபவர்களாக இல்லாமல், வேலை கொடுப்பதற்கான திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும் என்று மாணவர்கள் மத்தியில் பேசினார்.

Update: 2023-04-23 08:51 GMT

பிளஸ்-1, பிளஸ்-2 படித்து முடித்த மாணவ-மாணவிகள், உயர்கல்வியில் என்ன மாதிரியான படிப்புகளை தேர்வு செய்து படிக்க வேண்டும்? எந்த படிப்புகளை படித்தால் வேலைவாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்? என்பது போன்ற தகவல்களை மாணவர்கள் அறிந்து கொள்வதற்காக 'தினத்தந்தி' நாளிதழ் ஒவ்வொரு ஆண்டும் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து 'வெற்றி நிச்சயம்' என்ற நிகழ்ச்சியை மாணவ-மாணவிகளுக்கு நடத்தி வருகிறது.

அந்தவகையில் தினத்தந்தி, ஜெயா கல்வி நிறுவனத்துடன் இணைந்து திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் நேற்று 'வெற்றி நிச்சயம்' என்ற மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் 'கல்விப் பணியில் தினத்தந்தி' என்ற தலைப்பில், தினத்தந்தியின் தலைமை பொது மேலாளர் (புரோமோசன்) ஆர்.தனஞ்செயன் பேசினார். அதனைத்தொடர்ந்து 'கல்விப் பணியில் ஜெயா கல்வி நிறுவனங்கள்' என்ற தலைப்பில், ஜெயா கல்வி நிறுவனங்களின் தலைவர் ஏ.கனகராஜ் உரையாற்றினார். இதில், ஜெயா குரூப் ஆப் ஸ்கூல்ஸ் இயக்குனர் கருணாகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தெளிவு கிடைக்கும்

நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) செ.ஆ.ரிஷப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

நீங்கள் உங்கள் எதிர்காலத்திற்காக பெரிய முயற்சியை இன்று செய்து இருக்கிறீர்கள். பலர் என்ன படிப்பை தேர்வு செய்யலாம் என்ற அறியாமையில் இங்கு வந்திருப்பீர்கள். அந்த அறியாமையை வெளியேற்றி, உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

திறன்கள்

படிப்புகள் ஏராளம் இருக்கின்றன. ஆனால் அதில் உங்களுக்கு எதில் விருப்பம் அதிகம் இருக்கிறது என்பதை யோசியுங்கள். நீங்கள் படிப்பை தேர்வு செய்தபிறகு, படிக்கும் காலத்தில் இதை ஆர்வமாக படிக்க முடியுமா? என சிந்தியுங்கள். இந்த படிப்பு உங்கள் வாழ்க்கைக்கு உபயோகப்படுமா? என்று பாருங்கள். நீங்கள் உயர்கல்விக்காக செலவு செய்யும் 3 அல்லது 4 ஆண்டுகள் மீண்டும் உங்களுக்கு கிடைக்காது. ஆகவே இது மிக முக்கியமான தருணம். எனவே தகுந்த, விருப்பமான படிப்புகளை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.

வேலை கொடுக்க முடியும்

வேலை தேடுபவர்களை இந்த உலகம் தற்போது அங்கீகரிக்கவில்லை. மாறாக வேலை கொடுப்பவர்களைத்தான் மதிக்கிறது. நீங்கள் வேலைதேடுபவராக இருந்தால், உங்கள் ஒருவருக்கு மட்டும்தான் அந்த வேலை கிடைக்கும். அதுவே நீங்கள் தொழில் முனைவோராக மாறினால், நீங்கள் 10 பேருக்கு வேலை கொடுக்கமுடியும். படித்து முடித்ததும் எனக்கு வேலை கிடைத்தால் போதும் என்ற யோசனையில் இருக்காதீர்கள். படித்த படிப்பின் மூலம் எப்படி 10 பேருக்கு வேலை கொடுக்க முடியும் என்று சிந்தியுங்கள். அதை இப்போதிலிருந்து நீங்கள் நடைமுறைப்படுத்துங்கள்.

இன்றைய உலகில் தொடர்புத்திறன்களை வளர்த்துக்கொள்வதும் மிக அவசியமானது. இன்றைய கல்லூரி மாணவர்களுக்கு இதை கற்றுத்தர வேண்டியது மிகவும் தேவையான ஒன்று.

இவ்வாறு அவர் பேசினார்.

தனி முத்திரை

இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் பேசியதாவது:-

ஒரு குக்கிராமத்தில் படித்து இந்திய ஜனாதிபதியாக உயர்ந்த ஏ.பி.ஜெ.அப்துல் கலாமுக்கு உதவியது, அவருடைய கல்வி மட்டும்தான். ஆகையால் நீங்கள் அனைவரும் கல்வி ஒன்றையே மூலதனமாக கொண்டு சிறப்பாக கற்றீர்களானால், எதிர்காலம் சிறப்பானதாக இருக்கும். நீங்கள் அனைவரும் லட்சியத்தை உங்கள் மனதில் வைத்து, உங்கள் வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் தேர்வு செய்து படிக்கும் துறைகளில் தனி முத்திரையை நீங்கள் பதிக்கவேண்டும். உங்கள் பெற்றோரின் கருத்துக்கள், அறிவுரைகளை பின்பற்றுங்கள். சிறப்பாக செயல்படுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

ரொக்கப்பரிசு

அதைத்தொடர்ந்து, மருத்துவத்துறை மற்றும் நீட் நுழைவுத் தேர்வு குறித்து கோவை பாரதியார் பல்கலைக்கழக செனட் உறுப்பினர் ஆர்.காயத்ரியும், கலை மற்றும் அறிவியல் கல்லூரி படிப்புகள் குறித்து திருநின்றவூர் ஜெயா கல்லூரி தமிழ் துறை தலைவர் எஸ்.சுதாவும், சிவில் சர்வீசஸ் தேர்வு குறித்து கோவை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை துணை இயக்குனர் எம்.கருணாகரனும், என்ஜினீயரிங் துறை தொடர்பாக சென்னை ஜேப்பியார் என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் ஜெ.பிரான்சிஸ் சேவியரும், சட்டத்துறை குறித்து சேலம் சட்டக் கல்வியாளர் பி.ஆர்.ஜெயராஜனும், பட்டய கணக்கியல் தொடர்பாக டி.தவமணியும், விளையாட்டுத்துறை குறித்து தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எம்.கிரேஸ் ஹெலினாவும் பேசினார்கள். இறுதியில் தினத்தந்தி சென்னை மேலாளர் ஆர்.சதீஷ்குமார் நன்றியுரை கூறினார்.

நிகழ்ச்சியின் நிறைவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு ரொக்கப்பரிசும், வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில், மாணவ-மாணவிகளில் முதலாவதாக வந்த தலா ஒருவருக்கு ரொக்க பரிசும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியை மதுரை புலவர் வை.சங்கரலிங்கம் தொகுத்து வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்