சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2023-07-31 18:45 GMT

சிதம்பரம்:

சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற கீழத்தெரு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாத தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 21-ந் தேதி காப்புகட்டி கொடியேற்றதுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வீதிஉலா நடைபெற்று வந்தது. மேலும் தெருவடைச்சான், தேரோட்டம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி காலை 5 மணிக்கு கோவில் வளாகத்தில் பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்தும், மாவிளக்கு போட்டும் சாமி தரிசனம் செய்தனர். மேலும் பலர் பால் காவடி எடுத்தும், செடல் குத்தியும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்து சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

நேர்த்திக்கடன்

இதையடுத்து மதியம் 2 மணிக்கு பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தி ஊர்வலமாக அதே பகுதியில் உள்ள பாலமான் வாய்க்கால் கரைக்கு சென்றனர். அங்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, சக்தி கரகம் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. அதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் தீமிதி திருவிழா நடந்தது. இதில் ஆயிரக்காணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்து சாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் தில்லை. சீனு, தில்லை ஆர்.மக்கின், குமார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் பிரேமா வீராசாமி, பரம்பரை அருக்காவலர் ஸ்தானிகர் கலியமூர்த்தி மற்றும் பலர் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்