ஆதிமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
திருவிழந்தூர் ஆதிமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
மயிலாடுதுறை திருவிழந்தூர் கவரத்தெரு 2-வது வடக்குத்தெருவில் பழமை வாய்ந்த ஆதிமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 37-ம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 2-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி உற்சவ அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி உற்சவத்தையொட்டி நேற்று காலை காவிரி கரையில் இருந்து விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் எடுத்து கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் காப்புகட்டி விரதம் இருந்த பக்தர்கள் நேற்று மாலை காவிரி கரையில் இருந்து சக்தி கரகம் மற்றும் அலகு காவடி எடுத்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் கோவிலின் முன்பு அமைக்கப்பட்டு இருந்த தீக்குண்டத்தில் இறங்கி தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை அம்மனுக்கு செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.