பழுதடைந்து கிடக்கும் சாலைகள்

வால்பாறை பகுதியில் பழுதடைந்து கிடக்கும் சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2022-08-12 14:32 GMT

வால்பாறை

வால்பாறை பகுதியில் பழுதடைந்து கிடக்கும் சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மின்வாரிய சாலைகள்

வால்பாறை பகுதியில் நெடுஞ்சாலை துறை சாலைகள், நகராட்சி சாலைகள், மின் வாரிய சாலைகள் உள்ளது. இதில் நெடுஞ்சாலை துறை சாலைகள் தொடர்ந்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, போக்குவரத்திற்கு தகுதியான சாலைகளாக இருந்து வருகிறது. ஆனால் பல்வேறு எஸ்டேட் நிறுவனங்கள் தங்களது சாலைகளை நகராட்சியிடம் பாராமரிப்புக்காக ஒப்படைத்தும், முழுமையாக பராமரிப்பு செய்யப்படாமல் இருந்து வருகிறது.

இந்த நிலையில் வால்பாறை அருகே உள்ள சோலையாறு நகர் பகுதியில் இருந்து சேக்கல்முடி எஸ்டேட் செல்லும் சாலையில் கலியாண பந்தல் வரை உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமான 3 கிலோ மீட்டர் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக கடந்த பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

மழையால் அரிப்பு

தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருவதால், ஏற்கனவே பழுதடைந்து இருந்த அந்த சாலையில் அரிப்பு ஏற்பட்டு, மேலும் மோசமான நிலைக்கு சென்று விட்டது.

இதன் காரணமாக அந்த சாலையில் செல்லும் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் உள்பட வாகனங்கள் அனைத்தும் பழுதடைந்து வருகிறது. அதில் செல்பவர்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இதேபோன்று உருளிக்கல் வனத்துறையின் சோதனை சாவடியில் இருந்து மானாம்பள்ளி மின் நிலையம் வரை செல்லும் 8 கிலோ மீட்டர் தூர மின்வாரிய சாலையும் மிகவும் பழுதடைந்த நிலையில் பராமரிப்பு இல்லாமல் இருந்து வருகிறது.

தொடர் பராமரிப்பு

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

மின்வாரிய கட்டுப்பாட்டில் உள்ள சாலைகள் அனைத்தும் உரிய முறையில் பராமரிக்கப்படுவது இல்லை. இதனால் ஆம்புலன்ஸ்கள், பஸ்கள் உள்பட அனைத்து வாகனங்களிலும் பயணம் செய்வோர் கடும் இன்னலை சந்தித்து வருகின்றனர். நடுவழியில் வாகனங்கள் பழுதாகி நிற்பதால் வனவிலங்குகள் தாக்குதலுக்கு ஆளாகும் நிலை உள்ளது.

இது தவிர அவசர தேவைக்கு கூட விரைவாக செல்ல முடியவில்லை. இதன் காரணமாக அந்த சாலைகளை பயன்படுத்தி வரும் அனைத்து தரப்பினரும் அவதி அடைகின்றனர். எனவே தங்களது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சாலைகளையும் முறையாக சீரமைத்து, தொடர்ந்து பராமரிக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்