டிஜிட்டல் திரை அறிவிப்பு பலகை இல்லாததால் பயணிகள் பரிதவிப்பு
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் 2, 3-வது நடைேமடைகளில் டிஜிட்டல் திரை அறிவிப்பு பலகை இல்லாததால் பயணிகள் பரிதவிக்கிறார்கள்.
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் 2, 3-வது நடைேமடைகளில் டிஜிட்டல் திரை அறிவிப்பு பலகை இல்லாததால் பயணிகள் பரிதவிக்கிறார்கள்.
நெல்லை ரெயில் நிலையம்
தெற்கு ரெயில்வேயில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள்.
பயணிகள் போக்குவரத்து, சரக்குகளை கையாளுதல், வருவாய் என நெல்லை ரெயில் நிலையம் மதுரை கோட்டத்தில் 2-வது இடத்தை பிடித்துள்ளது. தெற்கு ரெயில்வேயில் முதல் 10 இடங்களுக்குள் வருகிறது. ஆனால் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் மிகவும் பின்தங்கி இருக்கிறது.
5 பிளாட்பாரங்கள்
இங்கு 5 பிளாட்பாரங்கள் (நடைமேடை) பயணிகள் பயன்பாட்டுக்கு அமைந்துள்ளது. இதில் நெல்லை எக்ஸ்பிரஸ், பெங்களூரு, கோவை உள்ளிட்ட ரெயில்கள் முதலாவது பிளாட்பாரத்தில் இருந்து இயக்கப்படுகிறது. நாகர்கோவில் -மும்பை, செந்தூர் எக்ஸ்பிரஸ், குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்கள் 2-வது நடைமேடை அல்லது 3-வது நடைமேடைகள் வழியாக இயக்கப்படுகிறது.
மேலும் நெல்லை -செங்கோட்டை, நெல்லை -திருச்செந்தூர், நெல்லை -தூத்துக்குடி, நெல்லை -ஈரோடு உள்ளிட்ட ரெயில்கள் 4 மற்றும் 5-வது நடைமேடைகளில் இருந்து புறப்பட்டு செல்கிறது.
ரெயில் பெட்டிகள் விவரம்
தொழில்நுட்ப வசதிக்கு ஏற்ப பல்வேறு ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தின் முதலாவது பிளாட்பாரத்தில் இருபுறமும் காணும் வகையில் 20-க்கும் மேற்பட்ட டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
அந்த திரையில், 1-வது பிளாட்பாரத்தில் வரும் ரெயிலின் விவரம் மற்றும் ரெயில் என்ஜினில் இருந்து வரிசையாக இணைக்கப்பட்டிருக்கும் ரெயில் பெட்டிகளின் எண் ஆகிய விவரமும் தெரிவிக்கப்படும். இதை பார்த்து டிக்கெட் முன்பதிவு செய்துள்ள பயணிகள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரெயில் பெட்டி பிளாட்பாரத்தில் வந்து நிற்கும் இடத்துக்கு சென்று தயாராக நிற்கிறாா்கள். ரெயில் வந்த உடன் அந்த பெட்டியில் எளிதாக ஏறி பயணிக்கிறார்கள்.
இதேபோல் முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுத்திருக்கும் பயணிகள் ரெயிலின் முன்பகுதியில் கூடுதலாக பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கிறதா? அல்லது பின் பகுதியில் கூடுதலாக பெட்டி இணைக்கப்பட்டு உள்ளதா? என்பதை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப தயாராகி கொள்கிறார்கள்.
டிஜிட்டல் திரை
ஆனால் இந்த டிஜிட்டல் திரை வசதி 2, 3-வது நடைமேடைகளில் அமைக்கப்படவில்லை. அந்த பிளாட்பாரங்களில் முழுமையாக மேற்கூரையும் இல்லை. இந்த வழியாகவும் பெரும்பாலான எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த பிளாட்பாரங்களில் எந்ெதந்த ரெயில் வரும் என்ற அறிவிப்பு மட்டுமே செய்யப்படுகிறது. ஆனால் ரெயிலின் பெட்டிகள் வரிசை பற்றி அறிவிப்பு செய்வதற்கு வசதி இல்லை. இதனால் பயணிகள் ரெயில் வரும்போது தங்களது பெட்டிகளில் ஏறுவதற்காக அங்குமிங்கும் ஓடுகிறார்கள். மூட்டை, முடிச்சுகளுடன் சிலர் கீழே விழுந்து காயமும் அடைகிறார்கள். ரெயில் வரும் போதும், வந்து நின்று சில நிமிடங்கள் வரையும் பயணிகள் பரிதவிக்கிறார்கள். அவர்களை வழி அனுப்ப வரும் குடும்பத்தினரும் சிரமப்படுகிறார்கள்.
ஒரு சில செல்போன் செயலிகளில் பார்த்தால், அதில் தெரிவித்ததற்கு மாறாக பெட்டிகள் இருக்கின்றன. எனவே 2, 3-வது நடைமேடைகளில் முழுமையாக கூரைகள் அமைத்து, அங்கு டிஜிட்டல் திரைகள் அமைக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
டிக்கெட் முன்பதிவு மையம்
இதுதவிர நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தின் மேற்கு நுழைவு வாசலையும் ஒருசில பயணிகள் பயன்படுத்தி வருகிறார்கள். சந்திப்பில் இருந்து டவுன் பகுதிக்கு செல்வதற்கு இந்த நுழைவு வாசல் வசதியாக இருக்கிறது.
ஆனால் அந்த நுழைவு வாசல் பகுதியில் உள்ள டிக்கெட் முன்பதிவு மையம் கொரோனா பரவலையொட்டி மூடப்பட்டது. அந்த மையம் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. அதையும் திறந்து பயணிகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்து கொடுத்தால் பயன் உள்ளதாக இருக்கும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பயணிகள் கோரிக்கை
இதுகுறித்து ரெயில் பயணிகள் நலச்சங்க பொதுச்செயலாளர் அப்பாத்துரை கூறியதாவது:-
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தை பயன்படுத்தாத பயணிகளே இருக்க முடியாது. இங்கு 1-வது நடைமேடை தவிர அனைத்து ரெயில் நடைமேடைகளிலும் மழை காலத்தில் நனைந்து கொண்டும், வெயில் காலத்தில் கொளுத்தும் வெயிலிலும் காத்திருக்க வேண்டி உள்ளது. எனவே 2, 3-வது நடைமேடைகளை மேம்படுத்தி டிஜிட்டல் திரைகளை நிறுவ வேண்டும்.
இதுதவிர பாசஞ்சர் ரெயில்கள் இயக்கப்பட்டு வரும் 4, 5-வது பிளாட்பாரத்தில் லிப்ட் (மின்தூக்கி) அமைக்கும் பணியை விரைவாக முடித்து பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். இந்த பிளாட்பாரங்களையும் மேம்படுத்த வேண்டும். மேலும் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தின் மேற்கு பகுதி நுழைவு வாசலுக்கு பயணிகள் எளிதாக வந்து செல்வதற்கு நடவடிக்கை எடுப்பதுடன், அங்கு செயல்பட்டு வந்த முன்பதிவு மையத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.