குற்றவழக்குகளில் டிஜிட்டல் ஆதாரம் - விதிகள் வகுக்க டி.ஜி.பி.க்கு 4 வாரங்கள் அவகாசம் வழங்கியது ஐகோர்ட்டு
தீவிர குற்றங்களை விசாரிப்பதற்கு சிறப்பு பிரிவை துவங்குவதற்கான காவல் நிலையங்களை அடையாளம் காண டி.ஜி.பி.க்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
சென்னை,
ஒரு கொலை வழக்கில் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை, பொதுவாக தீவிர குற்றவழக்குகளின் விசாரணை தரத்தை மேம்படுத்துவது தொடர்பாக சிறப்பு பிரிவை ஏன் அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் அறிவுறுத்தியிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக டி.ஜி.பி. தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் இதுபோல் தமிழகத்தில் 11 தாலுகாக்களில் தீவிர குற்றவழக்குகளை விசாரிப்பதற்கு சிறப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த தீவிர குற்றவழக்குகளில் உரிய காலத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இதை மற்ற இடங்களுக்கு விரிவுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், டிஜிட்டல் ஆதாரங்களை சேகரிப்பது தொடர்பான விதிகள் வகுக்கக்கூடிய நடைமுறை இறுதிக்கட்டத்தில் இருப்பதால் அதற்கு 2 வார கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதையடுத்து தீவிர குற்றங்களை விசாரிப்பதற்கு சிறப்பு பிரிவை துவங்குவதற்கான காவல் நிலையங்களை அடையாளம் காண வேண்டும் என்று டி.ஜி.பி.க்கு அறிவுறுத்திய நீதிபதிகள், டிஜிட்டல் ஆதாரங்களை சேகரிப்பது தொடர்பான விதிகளை வகுப்பது முக்கியம் என்பதால் அதில் அவசரம் காட்ட வேண்டாம் என்று தெரிவித்து 2 வார காலம் அவகாசம் கோரிய நிலையில், 4 வார காலம் அவகாசம் வழங்கி , இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 21-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.