தனியார் மையத்தில் அதிகம் கட்டணம் வசூலிப்பதால் கடும் சிரமம்: கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் எக்ஸ்ரே பிரிவு மீண்டும் செயல்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தனியார் மையத்தில் அதிகம் கட்டணம் வசூலிப்பதால் கடும் சிரமமமாக உள்ளதால் கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் எக்ஸ்ரே பிரிவு மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.

Update: 2022-10-09 18:45 GMT

கோத்தகிரி

தனியார் மையத்தில் அதிகம் கட்டணம் வசூலிப்பதால் கடும் சிரமமமாக உள்ளதால் கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் எக்ஸ்ரே பிரிவு மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.

எக்ஸ்ரே பிரிவு மூடல்

கோத்தகிரி பஸ் நிலையம் அருகில் பல்வேறு சிறப்புப் பிரிவுகளுடன் அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. கோத்தகிரி தாலுகா பகுதியில் செயல்பட்டு வரும் இந்த மருத்துவமனையில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 250 குக்கிராமங்களை சேர்ந்த நோயாளிகள் தினம்தோறும் சென்று சிகிச்சைப் பெற்று செல்கின்றனர்.

இந்தநிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன் எக்ஸ்ரே பிரிவில் உள்ள எக்ஸ்ரே எந்திரம் பழுதடைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக எக்ஸ்ரே பிரிவு மூடப்பட்டதால் இங்கு பணியாற்றிய எக்ஸ்ரே நிபுணர் மேட்டுப்பாளையம் பகுதிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். எனவே இந்தப்பிரிவு செயல்படாமல் உள்ளதால் நோயாளிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

அதிக கட்டணம்

இது குறித்து நோயாளிகள், பொதுமக்கள் கூறியதாவது:- அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்க கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. எக்ஸ்ரே எடுத்த பின் அந்த பிலிம் வேண்டுமென்றால் வெறும் ரூ.20 செலுத்தினால் போதும். ஆனால் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்லும் போது எக்ஸ்ரே பிரிவு எடுக்க டாக்டர்கள் பரிந்துரைத்தால் தனியார் மருத்துவமனை மற்றும் எக்ஸ்ரே எடுக்கும் மையங்களில் 400 ரூபாய் முதல் 700 ரூபாய் வரைக் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. மேலும் அவசர தேவைக்கு எக்ஸ்ரே எடுக்க முடியாவிட்டால் அரசு மருத்துவமனையில் உள்ள சி.டி. ஸ்கேன் எடுக்க வேண்டி உள்ளது.

இதற்கும் சலுகை கட்டணம் 500 ரூபாய் செலுத்த வேண்டி உள்ளது. இதன் காரணமாக ஏழை நோயாளிகள் சிரமதிற்குள்ளாகி வருகின்றனர். எனவே அரசு மருத்துவமனையில் பழுதாகி உள்ள எக்ஸ்ரே எந்திரத்தை மாற்றி புதிய எந்திரத்தை அமைத்து எக்ஸ்ரே பிரிவு மீண்டும் செயல்பட மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்

சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- கடந்த 8 மாதங்களாக அரசு மருத்துவமனையில் உள்ள எக்ஸ்ரே பிரிவு செயல்படாததால், அங்கு எக்ஸ்ரே எடுப்பதற்காக வாங்கி வைக்கப்பட்டுள்ள பிலிம்களின் காலாவதி தேதி முடிந்து அவை வீணாகும் அபாயம் உள்ளது. இதனால் மக்களின் வரிப்பணம் வீணாகும். மேலும் நோயாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு விரைந்து எக்ஸ்ரே பிரிவை செயல்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்