விவசாய பயன்பாட்டுக்கு மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும்

விவசாய பயன்பாட்டுக்கு மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும் என்று குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

Update: 2022-06-24 13:52 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்  மாதாந்திர விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள், கோரிக்கைகள் குறித்து பேசியதாவது:-

மீனவர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்கப்படுவதைப்போன்று உணவு உற்பத்தி செய்து வரும் விவசாயிகளுக்கு விவசாய பயன்பாட்டுக்காக மானிய விலையில் டீசல் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும், இ-சேவை மையம் சரியான முறையில் இயங்கவில்லை. அவற்றை சரிசெய்து பள்ளி மாணவ- மாணவிகளுக்கு சான்றுகள் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்திரப்பதிவுத்துறை சரியான முறையில் பத்திரப்பதிவு செய்து தருவதில்லை. மலட்டாறு புனரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும். திருவெண்ணெய்நல்லூர் கால்நடை மருத்துவமனையில் டாக்டர் பற்றாக்குறை உள்ளது. போதிய டாக்டர்களை நியமிக்க வேண்டும்.

இடைத்தரகர்களின் ஆதிக்கம்

நந்தன் கால்வாய் திட்டப் பணிகள் கடந்த ஆட்சிக்காலத்தில் அடிக்கல் நாட்டி தொடங்கப்பட்டது. இன்னும் அந்த பணிகள் முடிக்கப்படாமல் கிடப்பிலேயே உள்ளது. அப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். ஜமாபந்தியில் பட்டா மாற்றம் செய்ய மனு கொடுத்தும் இன்னும் பட்டா வழங்கப்படவில்லை.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. முன்பு 3 நாட்களில் பணம் கிடைக்க ஏற்பாடு செய்திருந்த நிலையில் தற்போது பணம் கிடைக்க மிகவும் தாமதமாகிறது. நெல் மூட்டைகளை உடனுக்குடன் நகர்வு செய்வதில்லை. ஒரு மாதம் வரை அங்கேயே நெல் மூட்டைகளை வைத்திருந்தால் அது என்னவாகும்? மழையில் இருந்து நெல் மூட்டைகளை பாதுகாக்க தார்பாய் வசதியும் கிடையாது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

தடையின்றி உரம் கிடைக்க ஏற்பாடு

இதற்கு பதிலளித்து கலெக்டர் மோகன் பேசுகையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஒரு குழு அமைத்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயத்திற்கு தேவையான உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் தங்கு தடையின்றி கிடைத்திட வழிவகை செய்யப்படும் என்றார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், வேளாண் இணை இயக்குனர் ரமணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சண்முகம், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் யசோதாதேவி, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ராஜேந்திரவிஜய் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்