சிறப்பு வகுப்புக்கு சென்ற 10-ம் வகுப்பு மாணவன், மின்சாரம் தாக்கி பலி

சிறப்பு வகுப்புக்கு சென்ற 10-ம் வகுப்பு மாணவன், மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Update: 2022-12-01 18:45 GMT

திருப்பத்தூர், 

சிறப்பு வகுப்புக்கு சென்ற 10-ம் வகுப்பு மாணவன், மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

சிறப்பு வகுப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள வி.மலம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். ஓட்டல் தொழிலாளி. இவருடைய மனைவி செல்வி. இவர்களுடைய மகன்கள் வள்ளியப்பன் (வயது 20), சின்னையா (17), விஜயகுமார் (15). அதில் இளைய மகன் விஜயகுமார் அருகில் உள்ள வேலங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தினமும் விஜயகுமார் பள்ளியில் நடக்கும் சிறப்பு வகுப்புக்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றும் வழக்கம் போல அவர் சிறப்பு வகுப்பிற்காக காலை 7 மணிக்கு பள்ளிக்கு சென்றார். ஒரு வகுப்பு முடிந்த நிலையில் காலை உணவு இடைவேளை விடப்பட்டது. அப்போது விஜயகுமார் பள்ளிக்கு வெளியில் சென்றதாக கூறப்படுகிறது.

மின்சாரம் தாக்கி சாவு

மேலும் அப்பகுதியில் மின்வயர் செல்லும் இணைப்பு கம்பியை அவர் தொட்டுள்ளார். அப்போது திடீரென அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட விஜயகுமார், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் இதுகுறித்து ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் இது தொடர்பாக கண்டவராயன்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பலியான மாணவரின் உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே மாணவரின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

மாணவன் மின்சாரம் தாக்கி இறந்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்