ஓசூர்:
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் பாமினி தாலுகாவை சேர்ந்தவர் ஹரீஷ். இவருடைய மகன் சித்தார்த் (வயது 11). இந்த நிலையில் ஹரீஷ், அவருடைய மனைவி ஓசூர் தாலுகா தும்மனப்பள்ளி அருகே முகுலப்பள்ளி பகுதியில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் தங்கி வேலை செய்து வந்தனர். அவர்களுடன் சித்தார்த் இருந்து வந்தான்.
இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி கணவன், மனைவி வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது சித்தார்த் சைக்கிள் ஓட்டியபோது அவன் திடீரென தவறி கீழே விழுந்தான். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சிறுவனை பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சித்தார்த் இறந்தான். இதுகுறித்து பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.