தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள சீராம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் காளி ரத்தினம் (வயது 27). தொழிலாளி. இவருடைய மனைவி ரம்யா (21). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக ரம்யா கடந்த சில தினங்களுக்கு முன்பு உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த காளி ரத்தினம் தீயை அணைக்க முயன்றார். இதில் 2 பேருக்கும் உடலில் தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் 2 பேரையும் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காளி ரத்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
=====