நாமக்கல் அருகே மகளை அழைத்து செல்ல வந்தபோது கார் கவிழ்ந்து பள்ளி ஆசிரியை பலி நாய் குறுக்கே புகுந்ததால் பரிதாபம்

நாமக்கல் அருகே மகளை அழைத்து செல்ல வந்தபோது கார் கவிழ்ந்து பள்ளி ஆசிரியை பலி நாய் குறுக்கே புகுந்ததால் பரிதாபம்

Update: 2022-10-21 18:45 GMT

நாமக்கல் அருகே மகளை அழைத்து செல்ல வந்தபோது நாய் குறுக்கே புகுந்ததால் கார் கவிழ்ந்து அரசு பள்ளி ஆசிரியை பலியானார்.

கார் கவிழ்ந்தது

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ரங்கப்பிள்ளை தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 50). இவர் பண்ருட்டி கண்டிகை அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இவருடைய மனைவி ராதா (40). இவர் நத்தநல்லூர் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

இவர்களுடைய மூத்த மகள் கீர்த்தனா. இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். தற்போது தீபாவளி பண்டிகை விடுமுறை காரணமாக நடராஜன் மகளை அழைத்து செல்ல வாலாஜாபாத்தில் இருந்து காரில் நாமக்கல்லுக்கு வந்தார். அவருடன் மனைவி ராதா. இளைய மகள் பிருந்தா மற்றும் உறவினர் சஞ்சய் (20) என்பவரும் வந்துள்ளனர்.

நேற்று அதிகாலை 3 மணியளவில் கார் சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நாமக்கல் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது முதலைப்பட்டியில் உள்ள மேம்பாலத்தை அடுத்து சிறிது தூரம் சென்றபோது திடீரென குறுக்கே வந்த நாய் மீது கார் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஆசிரியை பலி

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஆசிரியை ராதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் ஆசிரியர் நடராஜன், அவரது இளைய மகள் பிருந்தா, உறவினர் சஞ்சய் ஆகியோர் லேசான காயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நல்லிபாளையம் போலீசார் ராதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மகளை வீட்டிற்கு அழைத்து செல்ல வந்தபோது அரசு பள்ளி ஆசிரியை விபத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்