இண்டூர் அருகேகிணற்றில் மூழ்கி முதியவர் சாவுதுக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு குளித்தபோது பரிதாபம்
பாப்பாரப்பட்டி:
இண்டூர் அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு கிணற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி முதியவர் இறந்தார்.
துக்க நிகழ்ச்சி
தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள திப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது 60). இவர் தனது மகன் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் அர்ஜூனன் அதே பகுதியில் நடந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு குளிப்பதற்காக விவசாய நிலத்தில் உள்ள கிணற்றுக்கு சென்றார்.
அப்போது தண்ணீரில் இறங்கியபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கினார். அந்தசமயம் அக்கம் பக்கத்தில் யாரும் இல்லாததால் அவர் நீரில் மூழ்கியது யாருக்கும் தெரியவில்லை.
விசாரணை
இந்த நிலையில் நீண்ட நேரமாகியும் அர்ஜூனன் வராததால் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். பின்னர் கிணற்றில் பார்த்தபோது அவர் பிணமாக மிதந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த இண்டூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அர்ஜூனன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.