மாணவர் 'மனசு பெட்டி'... மனம் திறக்க வைத்ததா?
கடந்த 2019-ம் ஆண்டு பெண் குழந்தை பாலியல் துன்புறுத்தல் வழக்கு ஒன்றில், தீர்ப்பு வழங்கிய மகிளா கோர்ட்டு நீதிபதி சில கருத்துகளை முன்வைத்தார். அதில் பாலியல் குற்றங்கள் தொடர்பாக பள்ளிக்கூடங்களில் மாணவ-மாணவிகள் தங்கள் புகார்களை தெரிவிக்க புகார் பெட்டி வைக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
மாணவர் மனசு பெட்டி
அதனை செயல்படுத்தும் விதமாகவும், சமீபத்தில் பள்ளி மாணவிகளுக்கு நிகழ்ந்த பாலியல் தொந்தரவுகளை தடுக்கும் விதமாகவும் பள்ளிக் கல்வித்துறை கொண்டு வந்ததுதான் இந்த 'மாணவர் மனசு பெட்டி'. அதுமட்டுமல்ல, பள்ளிகளில் உள்ள நிறைகுறைகள், கல்விப்பாதையில் மாணவ-மாணவிகளின் மனதில் உள்ள எண்ணங்கள், தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஏதுவாகவும் இது ஏற்படுத்தப்பட்டது.தமிழகம் முழுவதும் உள்ள 31 ஆயிரத்து 214 அரசு இடைநிலைப்பள்ளிகள், 6 ஆயிரத்து 177 மேல்நிலைப்பள்ளிகளில் இந்த பெட்டியை வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ.1,000 நிதியையும் கல்வித்துறை ஒதுக்கியது.
உடனுக்குடன் தீர்வு
அதன்படி, அனைத்து பள்ளிகளிலும் இந்த 'மாணவர் மனசு பெட்டி' தலைமை ஆசிரியர் அறைக்கு முன்பாக வைக்கப்பட்டு இருக்கிறது. இதில் புகார் தெரிவிக்கும் மாணவ-மாணவிகளின் புகார்களை கண்காணிக்க தலைமை ஆசிரியர் தலைமையில், 2 ஆசிரியர்கள், ஒரு பெற்றோர், பெற்றோர்-ஆசிரியர் கழக உறுப்பினர், ஆசிரியர் அல்லாத பணியாளர், நிர்வாக பணியாளர், வெளி உறுப்பினர் கொண்ட பாதுகாப்பு ஆலோசனைக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழு 'மாணவர் மனசு பெட்டி'யில் விழும் புகார்களை 15 நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது வாரத்துக்கு ஒரு முறையோ பிரித்து பார்த்து, அதில் மாணவ-மாணவிகள் தெரிவித்து இருப்பதை பள்ளி அளவில் நிவர்த்தி செய்ய முடிந்ததை உடனுக்குடன் தீர்வு காணுகின்றனர். சிறிய புகாரைக்கூட தட்டிக்கழிக்காமல் அனைத்தையும் சரி செய்கின்றனர்.
என்ன மாதிரியான புகார்கள்?
பெரும்பாலும் பள்ளி அளவில் நிவர்த்தி செய்யப்படக்கூடிய புகார்களைதான் மாணவ-மாணவிகள் அதிகம் தெரிவிப்பதாகவும், அதனை ஓரிரு நாட்களில் சரிசெய்து விடுவதாகவும் பள்ளி நிர்வாகம் தெரிவிக்கிறது. அந்தவகையில், ஆசிரியர்கள் வீட்டு பாடம் அதிகம் கொடுக்கிறார்கள். அதை குறைத்து கொடுக்க சொல்லுங்கள்.... வகுப்பு தலைவன் என்னை அதிகம் திட்டுகிறான்... வகுப்பறையில் மின் விசிறி சரியாக சுழலுவதில்லை... உடற்கல்வி பாடவேளையில் வேறு வகுப்பு ஆசிரியர் பாடம் எடுப்பதை தவிர்க்கவேண்டும்... என்பது போன்ற வகுப்பறை சார்ந்த புகார்கள்தான் பெருமளவில் இடம்பெறுகின்றன.
இதுதவிர வகுப்பறையில் சில மாணவ-மாணவிகள் செல்போன் பயன்படுத்துகிறார்கள்... தவறான வார்த்தைகளை சிலர் பேசுகிறார்கள்... ஒழுங்கீனமாக சில மாணவர்கள் நடக்கிறார்கள்... என்பது போன்ற நல்ல நோக்கத்துடனும் அவ்வாறு ஈடுபடுபவர்களின் பெயர்களை குறிப்பிட்டு புகார்களையும், பள்ளிகளில் கழிவறை சுத்தம் செய்யப்படாமல் இருக்கிறது... கழிவறை கதவு உடைந்துள்ளது... குடிநீர் வசதி குறைவாக இருக்கிறது... செடிக்கு தண்ணீர் ஊற்றாமல் இருக்கிறது... என்பது போன்ற பொதுநல புகார்களையும் பதிவு செய்து வருகின்றனர்.
'சானிட்டரி நாப்கின்' வையுங்கள்...
மேலும், வீட்டில் சொல்ல முடியாத சிலவற்றையும் மாணவ-மாணவிகள் மனம் திறந்து பெயருடன் குறிப்பிட்டு இந்த பெட்டியில் கடிதமாக எழுதி போடுகிறார்கள். சிலர் நேரடியாக ஆசிரியர்களிடமும் தெரிவிக்கிறார்கள். அந்த மாணவர்களை அழைத்து பேசுவதோடு, சம்பந்தப்பட்டவர்களின் பெற்றோரிடம் முறைப்படி ஆசிரியர்கள் எடுத்துக்கூறுகின்றனர்.அதுமட்டுமல்லாமல், என்னுடைய நண்பர் கடந்த சில நாட்களாக சரியாக பேசவில்லை. உடனே அழைத்து என்னிடம் பேச வையுங்கள், கல்வி சுற்றுலா அழைத்து செல்லுங்கள், சமையல் போட்டி நடத்துங்கள், ஓடி விளையாட அனுமதியுங்கள், பள்ளியில் 'சானிட்டரி நாப்கின்' எந்திரம் வையுங்கள் போன்றவையும் இந்த புகார் பெட்டியில் புகார்களாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நோக்கம் நிறைவேறி இருக்கிறதா?
என்னதான் ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டாலும், அதில் சில முகம் சுழிக்க வைக்கும் சம்பவங்கள் நிகழாமல் இருக்காது. அதன்படி, சமீபத்தில் ஒரு பள்ளியில் மாணவர் மனசு பெட்டியில் பெயர் குறிப்பிடாமல் காதல் கடிதம் போடப்பட்ட தகவல்களும் வெளியாகின.
எந்த நோக்கத்துக்காக இந்த 'மாணவர் மனசு பெட்டி' திட்டம் கொண்டு வரப்பட்டதோ? அது நிறைவேறி இருக்கிறதா? என்பது தொடர்பாக பள்ளி மாணவ-மாணவிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
பிரச்சினை இல்லை
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அரசு பள்ளியில் படிக்கும் பிளஸ்-1 மாணவர் ராஜேஷ்:- பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களுக்கு புரியும் வகையில் பாடங்களை நடத்தி வருகிறார்கள். மேலும் புகார் அளவுக்கு எங்களுக்கு எந்தவித பிரச்சினையும் ஏற்படவில்லை.
பயனுள்ள திட்டம்
விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பிளஸ்-2 மாணவி விஜயலட்சுமி:- மாணவர் மனசு பெட்டி எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஆசிரியர்களிடம் நேரில் சென்று சொல்ல முடியாத விஷயங்களை எப்படி அவர்களிடம் சொல்வது என்று பல நாட்கள் யோசித்து இருப்போம். ஆனால் இனி சொல்ல வேண்டிய விஷயத்தை கடிதத்தின் மூலமாக உடனடியாக தெரிவிக்க முடியும் என்பதால் இது எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. மேலும் யார் தவறு செய்தாலும் அவர்களை கடிதத்தின் மூலமாக தெரிவிக்க முடியும். மேலும் எங்களுடைய பெயர்களை நாங்கள் தெரிவிக்காமலும் விஷயங்களை மட்டுமே தெரிவிப்பதற்கு இந்த மாணவர் மனசு பெட்டி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எங்களது கருத்துக்கள், எண்ணங்களை தெரிவிப்பதற்கு சிறந்த வழி மாணவர் மனசு பெட்டி. இதனைக் கொண்டு வந்த தமிழக அரசுக்கு மிக்க நன்றி.
பெற்றோர் கருத்து
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலத்தை சேர்ந்த ஒரு மாணவியின் தந்தை சண்முகம்:- இன்றைய சூழ்நிலையில் பள்ளி மாணவ- மாணவிகள் தங்கள் பள்ளியில் நடக்கும் பிரச்சினைகளை பெற்றோரிடம் கூற தயங்குகின்றனர். இதேபோல் ஆசிரியர்களிடம் நேரடியாக கூறுவதற்கும் தயங்குகின்றனர். கடிதத்தின் மூலமாக சொல்வது என்பது ஒரு சிறந்த வழியாகவே நாங்கள் கருதுகிறோம். மேலும் எந்த பிரச்சினையாக இருந்தாலும் அது சிறிதாக இருக்கும் பொழுது உடனே சரி செய்வதற்கு இது ஒரு சிறந்த வழி. எனவே இதனைக் கொண்டு வந்த தமிழக அரசுக்கும், கல்வித்துறைக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணவர்களின் பிரச்சினைகளை தீர்க்க சிறந்த வழி- பள்ளி தலைமை ஆசிரியர்கள் கருத்து
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அறிவழகன் கூறுகையில், பள்ளி மாணவ-மாணவிகள் எந்த பிரச்சினை இருந்தாலும் அதனை துண்டு சீட்டுகளில் எழுதி மாணவர் மனசு பெட்டியில் போட்டு விடுகின்றனர். இதையடுத்து, நாள்தோறும் மாணவர் மனசு பெட்டியை திறந்து பார்த்து அதில் ஏதேனும் கடிதங்கள் இருந்தால் அதனை பிரித்து படித்து பார்த்து அந்த குறைகளையோ அல்லது பிரச்சினைகளையோ உடனே தீர்வு காண்பதற்கு மிகவும் வசதியாக உள்ளது. மாணவர் மனசு பெட்டி திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 3 மாதங்கள் ஆகிறது. பல்வேறு பிரச்சினைகளுக்கு உடனே தீர்வு கண்டுள்ளோம். மாணவர்களின் பிரச்சினைகளை உடனே தீர்ப்பதற்கு ஒரு சிறந்த வழியாக உள்ளது என்று கூறினார்.
உடையார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இல.தமிழ்ச்செல்வன் கூறுகையில், ஒவ்வொரு நாளும் மாணவர் மனசு பெட்டியை திறந்து பார்ப்போம். ஆனால் எந்த புகாரும் அதில் இருப்பது இல்லை. பள்ளி மாணவர்கள் குறை சொல்லும் அளவுக்கு நாங்கள் நடந்து கொள்வதும் இல்லை. மாதம் ஒரு முறை கூட்டம் நடத்தி எங்களுக்குள் கலந்துரையாடல் செய்து மாணவர்களை எப்படி கையாள்வது, எப்படி அதிக மதிப்பெண் வாங்க வைப்பது குறித்து விவாதிக்கப்படும் என்றார்.