சாலையோரம் வீசிய பச்சிளம் குழந்தையை நாய்கள் கடித்து குதறி கொன்றதா?
உசிலம்பட்டியில் சாலையோரம் வீசப்பட்ட பச்சிளம் குழந்தையை நாய்கள் கடித்து குதறி கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் அந்த குழந்தையின் சிதைந்த உடல் பாகங்களை மீட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உசிலம்பட்டியில் சாலையோரம் வீசப்பட்ட பச்சிளம் குழந்தையை நாய்கள் கடித்து குதறி கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் அந்த குழந்தையின் சிதைந்த உடல் பாகங்களை மீட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெஞ்சை உலுக்கும் இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
துணியால் சுற்றி வீச்சு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், தேனி ரோட்டில் உள்ள ஒரு தியேட்டர் அருகே ரத்த கறையுடன் கிடந்த துணியை நாய்கள் கடித்து குதறின.
இதை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு விரைந்து வந்த உசிலம்பட்டி டவுன் போலீசார் ரத்தக் கறையுடன் கிடந்த துணியை பிரித்து பார்த்தனர்.
அதில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையின் உடல் நாய்கள் கடித்து குதறியதில், சிதைந்த நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
போலீசார் அந்த குழந்தையின் உடல் பாகங்களை சேகரித்து பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுெதாடர்பாக வழக்குப்பதிவு செய்து, பச்சிளம் குழந்தையை சாலையோரம் வீசிச்சென்றது யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
வீசிச் சென்றது யார்?
குழந்தையின் உடல் பெரும்பாலும் சிதைந்த நிலையில் காணப்பட்டதால் அது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா? என கண்டறிய முடியவில்லை.
உயிருடன் இருந்த குழந்தையை வீசிச் சென்றார்களா அல்லது ,இறந்த குழந்தையா, கள்ளக்காதலில் பிறந்ததால் அதன் தாயே துணியில் சுற்றி போட்டுவிட்டு சென்றாரா அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில், இதுதொடர்பான காட்சிகள் ஏதும் பதிவாகி உள்ளதா என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
பரபரப்பு
உசிலம்பட்டியில் பிறந்து சில மணிநேரமே ஆன குழந்தை சாலையோரம் வீசப்பட்டதும், அதை நாய்கள் கடித்து குதறி உடலை சிதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.