பசும்பலூர் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

பசும்பலூர் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

Update: 2023-05-21 18:30 GMT

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பசும்பலூர் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தீமிதி திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான தீமிதி திருவிழா கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து ஒவ்வொரு நாள் இரவும் மகாபாரத கதைகள், நாடகம் நடைபெற்றது. அதில் சந்தனு, வியாசர், திருதராட்டினன், கர்ணன், தர்மர், கிருஷ்ணன் ஆகியோர் பிறப்பு, கிருபாச்சாரியார் பள்ளிக்கூடம், துரோணாச்சாரியார் பள்ளிக்கூடம், திரவுபதி அம்மன் பிறப்பு, மகாசுரன் செங்கு பெயர்த்தல், அர்ச்சுனன் வில் வளைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றது. தொடர்ந்து திரவுபதி அம்மன் திருக்கல்யாணம், அர்ஜுனன் தீர்த்த யாத்திரை உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

நேற்று களப்பலி, மாடு திருப்புதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்வான தீமிதி திருவிழா மாலையில் நடைபெற்றது. இதில் பசும்பலூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். குறிப்பாக நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்களில் சிலர் தங்களது குழந்தைகளை தூக்கிக்கொண்டு தீ மிதித்தனர். இன்று (திங்கட்கிழமை) கூந்தல் முடிப்பு நிகழ்ச்சியும், நாளை (செவ்வாய்க்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவடைகிறது.

Tags:    

மேலும் செய்திகள்