அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
நெல்லையில் அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் நெல்லை வண்ணார்பேட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் குமாரசாமி தலைமை தாங்கினார்.
மத்திய அரசு வழங்கும் அதே நாளில் அகவிலைப்படி வழங்க வேண்டும். தேர்தல் காலத்தில் தி.மு.க. அளித்த வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மருத்துவ காப்பீட்டு தொகை, சந்தா தொகை உயர்வை ரத்து செய்ய வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வனக்காவலர்கள், பஞ்சாயத்து செயலாளர்கள், தலையாரிகளுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாநில செயலாளர் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் கோமதி நாயகம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பார்த்தசாரதி, அரசு விரைவு போக்குவரத்து கழக ஓய்வூதியர் நல அமைப்பு மாநில துணை தலைவர் வெங்கடாசலம், பேராச்சி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.