போலீஸ் நிலையம் முன்பு தர்ணா போராட்டம்
வந்தவாசியில் பெண்ணை தாக்கியவரை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம் முன்பு தர்ணா போராட்டம் நடந்தது.
வந்தவாசி
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி குளத்துமேடு பகுதியை சேர்ந்தவர் ஆஜாமொய்தீன். அவரது மனைவி ஆயிஷா (வயது 28). இவர், அதே பகுதியில் மீன் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு போதையில் வந்த வாலிபர், ஆயிஷாவிடம் தகராறு செய்து தாக்கியதாக தெரிகிறது. அதை தடுக்க வந்த ஆயிஷாவின் தந்தை மொய்தீனையும் தாக்கியுள்ளார்.
இதுகுறித்து ஆயிஷா வந்தவாசி தெற்கு போலீசில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் ஆயிஷாவை தாக்கியவரை கைது செய்யக் கோரி ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர் மற்றும் ஆயிஷா குடும்பத்தினர் வந்தவாசி தெற்கு போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த துணை சூப்பிரண்டு கார்த்திக், நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.