அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டம்

செமஸ்டர் தேர்வு கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-10-10 17:24 GMT


செமஸ்டர் தேர்வு கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரசு கலைக்கல்லூரி

திருவண்ணாமலை கிரிவலப் பாதை செங்கம் சாலையில் கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி உள்ளது.

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் இக்கல்லூரியில் காலை, மாலை என இரு சுழற்சி வேலைகளிலும் திருவண்ணாமலை மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலையை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு செமஸ்டர் தேர்வு கட்டணங்களை உயர்த்தி உள்ளது.

இந்த செமஸ்டர் தேர்வு கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதுமட்டுமின்றி கடந்த செமஸ்டர் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண்கள் குறைத்து போட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் கடந்த 2 மாதமாக இக்கல்லூரி மாணவர்கள் பல்வேறு கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் நேற்று மாலையுடன் செமஸ்டர் தேர்விற்கான கட்டணம் செலுத்த வேண்டிய நாள் நிறைவடைந்து உள்ளது. இதில் திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் பலர் செமஸ்டர் தேர்வு கட்டணம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

தர்ணா போராட்டம்

தொடர்ந்து செமஸ்டர் தேர்வு கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியும், தேர்வு கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கக்கோரியும் கல்லூரி வளாகத்திற்குள் மாணவர்கள் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து கோஷங்கள் எழுப்பினர். மேலும் மாணவர்கள் கல்லூரியின் நுழைவு கேட்டை கயிறால் கட்டி குறுக்கே மோட்டார் சைக்கிள் ஒன்றை நிறுத்தினர்.

இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை டவுன் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கேட்டை திறந்தனர்.

மாணவர்களின் இந்த தர்ணா போராட்டம் காலை முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது. அதை தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அப்போது தேர்வு கட்டணம் செலுத்த கால அவகாசம் பெற்று தர உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதன்பேரில் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதனால் கல்லூரி பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்