மக்கள் நல பணியாளரை கண்டித்து தர்ணா போராட்டம்

நாட்டறம்பள்ளி அருகே மக்கள் நலப்பணியாளரை கண்டித்து ஊராட்சி தலைவர் உள்பட 8 பேர் ராஜினாமா செய்வதாக கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-03-11 17:27 GMT

நாட்டறம்பள்ளி அருகே மக்கள் நலப்பணியாளரை கண்டித்து ஊராட்சி தலைவர் உள்பட 8 பேர் ராஜினாமா செய்வதாக கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மக்கள் நலப்பணியாளர்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே அக்ராகரம் ஊராட்சிக்கு உட்பட்ட 12 வார்டுகளில் மக்கள் நலப்பணியாளர் சசிகலா என்பவர் பணிபுரிந்து வருகிறார். தமிழகம் முழுவதும் மாவட்ட கலெக்டர்கள் மகாத்மா ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியில் மக்கள் நலப்பணியாளருக்கு உதவியாளர் பணிக்காக பணிபுரியும் நபர்களின் எண்ணிக்கை 8-ல் இருந்து 12 ஆக உயர்த்தி கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்து இருந்தனர்.

இவர்களின் பணிக்காலம் 100 நாட்கள் எனவும் பிறகு மீண்டும் புதிய 12 நபர்களை நியமித்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் மக்கள் நலப்பணியாளர் சசிகலா கடந்த 5 முதல் 7 வருடங்களாக பணிப்புரியும் நபர்களை கொண்டு தன்னிச்சையாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சில நபர்களை கொண்டு ஊராட்சிகளில் 100 நாட்கள் வேலை செய்யும் சுமார் 1700 பயனாளிகளின் அட்டையை வாங்கி வைத்துள்ளார். இதனை கேட்ட ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன், ஊராட்சி செயலாளர் சங்கர் மற்றும் வார்டு உறுப்பினர்களை மிரட்டி என் அனுமதி இல்லாமல் ஊராட்சி மன்ற அலுவலகத்தை திறக்க கூடாது என சசிகலா பூட்டு போட்டு சாவியை எடுத்து சென்றதாக தெரிகிறது.

தர்ணா போராட்டம்

இந்த நிலையில் மக்கள் நலப்பணியாளர் சசிகலாவை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அக்ராகரம் ஊராட்சி தலைவர் தேவேந்திரன், துணைத்தலைவர் சாமுடி, அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் சவிதா தேவன், வார்டு கவுன்சிலர்கள் பெருமாள், பூபதி, ஸ்ரீதர், ஏகாம்பரம், செல்விராஜேந்திரன், ஆகிய 8 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக கூறி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நேற்று காலை 9 மணி முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார், ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணவாளன், முருகேசன், நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலிசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கலெக்டர் உத்தரவின்படி விசாரணைக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன்பேரில் அவர்கள் அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்

சுமார் 2½ மணி நேரம் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்