பத்திரப்பதிவு, திருமண சான்றிதழ்கள் வழங்குவதில் இழுத்தடிப்புபாதிக்கப்பட்டவர்கள் சார்பதிவாளர் அலுவலகத்தில் தர்ணாஸ்ரீமுஷ்ணத்தில் பரபரப்பு

ஸ்ரீமுஷ்ணத்தில் பத்திரப்பதிவு, திருமண சான்றிதழ்கள் வழங்குவதில் இழுத்தடிப்பு செய்ததால், பாதிக்கப்பட்டவர்கள் சார்பதிவாளர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-01-11 18:45 GMT


ஸ்ரீமுஷ்ணம், 

ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள டி.பவழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராணி. இவர் வாங்கிய ஒரு நிலத்தை விற்க முடிவு செய்தார். இதற்காக ஸ்ரீமுஷ்ணம் படைவெட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சம்பந்தம் மகன் பூவராகமூர்த்தி என்பவர் மூலம் பத்திர ஆவணங்கள் தயார் செய்து பதிவு செய்வதற்காக ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகம் சென்றுள்ளார். அப்போது, ஒரு விதியை காரணம் காட்டி பத்திரப்பதிவை அங்கிருந்த அதிகாரி நிராகரித்ததாக கூறப்படுகிறது.

இதேபோன்று, காவனூர் கிராமத்தில் தந்தையின் சொத்தை மகனுக்கு தான செட்டில்மெண்ட் செய்து கொடுப்பதில் காலதாமதம், ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்த ஒருவர் தனது மகளின் திருமண சான்றிதழ் பதிவுக்காக சென்றபோது சான்றிதழ் வழங்குவதில் சில நாட்களாக காலம்தாழ்த்தி வந்து இருக்கிறார்கள்.

இவ்வாறு அதிகாரிகள் இழுத்தடிப்பு செய்து வருவதை கண்டித்து பாதிக்கப்பட்டவர்கள் நேற்று ஸ்ரீமுஷ்ணம் பத்திரப்பதிவு அலுவலகத்துக்குள் வந்து, தரையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், மதுபாலன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இது தொடர்பாக அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்பதாக உறுதியளித்தனர். இதையேற்று அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

போராட்டத்தை தொடர்ந்து, திருமண சான்றிதழ் கேட்டு வந்தவருக்கு உடனடியாக சான்றிதழ் வழங்கப்பட்டது. அதேபோன்று, செல்வராணியின் பத்திரப் பதிவை நிலுவையில் வைத்து விசாரணைக்கு பிறகு பதிவு செய்யப்படும் என்று சார்பதிவாளர் சங்கர் தெரிவித்தார்.

இந்த போராட்டம் காரணமாக, அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்