குடும்பத்துடன் மீன் வியாபாரி தர்ணா

நடைபாதையில் விழுந்து கிடக்கும் மரத்தை அகற்றக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் மீன் வியாபாரி குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

Update: 2022-12-19 18:45 GMT

நடைபாதையில் விழுந்து கிடக்கும் மரத்தை அகற்றக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் மீன் வியாபாரி குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா

நாகை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் நடந்தது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து மனு அளித்து சென்றனர்.

வேதாரண்யம் அருகே கஞ்சாண்டிக்காடு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 48) மற்றும் அவரது மனைவி அமுதா (46). மகன் சரண்ராஜ் (16) ஆகியோர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

சாய்ந்து விழுந்த மரம்

இதை பார்த்து அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நாகூர் போலீசார் சுப்பிரமணியளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர் கூறியதாவது:-

நான் மீன்வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்தி வருகிறேன். எனது வீட்டிற்கு செல்லும் நடைபாதையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் அங்கிருந்த மரம் சாய்ந்து விழுந்தது. இதனால் எனது வீட்டிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

அகற்றவில்லை

உடனே நான் அந்த மரத்தின் உரிமையாளரிடம் மரத்தை வெட்டி அகற்ற வேண்டும் என கூறினேன்.ஆனால் அவர் மரத்தை அகற்றவில்லை. நடைபாதையில் கிடக்கும் மரத்தை நான் வெட்ட சென்றாலும், அவர் மறுத்து வருகிறார்.

இது தொடர்பாக வேதாரண்யம் தாசில்தார், நகராட்சி என பல அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் எனது மகன் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. நடைப்பாதையில் கிடக்கும் மரத்தை வெட்டி அகற்ற வேண்டும் என்றார்.

கலெக்டர் விசாரணை

இதை தொடர்ந்து அவரை, போலீசார் கலெக்டரிடம் அழைத்து சென்றனர். சுப்பிரமணியனிடம் விசாரணை நடத்திய கலெக்டர் அருண்தம்புராஜ் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

இதையடுத்து அவர் தனது குடும்பத்தினருடன் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்