நம்பியூர் அருகே எலத்தூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா

நம்பியூர் அருகே எலத்தூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-08-16 21:10 GMT

நம்பியூர்

நம்பியூர் அருகே எலத்தூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டம்

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள எலத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 10-வது வார்டு பகுதியைச் சேர்ந்த பள்ளத்தூர் பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் நேற்று பகல் 11 மணி அளவில் எலத்தூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஒன்று திரண்டனர். பின்னர் அங்கு உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி அறிந்ததும் பேரூராட்சி செயல் அலுவலர் காவேரி செல்வன் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மண்டல துணை தாசில்தார் சுகேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன், கடத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் ஆகியோரும் அங்கு வந்தனர். அவர்களும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

கோவில் நிலத்தை மீட்கக்கோரி...

பின்னர் அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறும்போது, 'பள்ளத்தூர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இப்பகுதியில் உள்ள மாகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமான 6 சென்ட் இடத்தை ஒருவர் ஆக்கிரமித்துள்ளார். இந்த நிலத்தை மீட்கக்கோரி நாங்கள் பல்வேறு அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளோம். கடந்த சில நாட்களுக்கு முன்பு நம்பியூர் தாசில்தார் கவுசல்யா கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவரை காலி செய்ய கடிதம் மூலம் உத்தரவு பிறப்பித்ததாக கூறினார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் கோவில் நிலத்தை மீட்டு தரக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டோம்' என்றனர்.

அதற்கு செயல் அலுவலர் கூறும்போது, 'இதுசம்பந்தமாக தாசில்தார் மற்றும் உயர் அலுவலர்களிடம் பேசியுள்ளோம். விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்