சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூருக்கு சிறை தண்டனை பெற்றுத்தந்த போலீசாருக்கு டி.ஜி.பி. பாராட்டு

சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூருக்கு சிறை தண்டனை பெற்றுத்தந்த போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்தார். சுபாஷ் சந்திர கபூர் மீது 4 புதிய வழக்குகள் பதிவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-11-03 21:49 GMT

சென்னை,

சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூர், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் மீது கடந்த 2008-ம் ஆண்டு தஞ்சை மாவட்டம் உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. ரூ.94 கோடி மதிப்புள்ள 19 பழமை வாய்ந்த சிலைகளை அமெரிக்காவுக்கு கடத்தி சென்றதாக அவர் மீது வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டது.

பின்னர் இந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. கடந்த 1-ந்தேதியன்று கும்பகோணம் சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூருக்கு சிறை தண்டனை விதித்து அந்த தீர்ப்பில் வழங்கப்பட்டது.

டி.ஜி.பி. பாராட்டு

இந்த வழக்கை திறம்பட கையாண்டு 13 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுத்தந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்தார்.

இந்த வழக்கில் திறமையாக செயல்பட்ட சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன், ஓய்வுபெற்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நடராஜன், ஓய்வுபெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு உதயகுமார் மற்றும் போலீசாரை தனது அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி. ஜெயந்த் முரளியும் கலந்துகொண்டார்.

4 புதிய வழக்குகள்

சிறை தண்டனை பெற்றுள்ள சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூர் மீது மேலும் 4 புதிய வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று இரவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்