5½ லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5½ லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்தார்

Update: 2023-02-14 18:45 GMT

கள்ளக்குறிச்சி

குடற்புழு நீக்க மாத்திரை

கள்ளக்குறிச்சி ஏமப்பேர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில் கலெக்டர் ஷ்ரவன்குமார் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ராஜா, ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-

2,517 இடங்களில்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் என மொத்தம் 2,517 இடங்களில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

பொது தேர்வுக்கு தயாராகும் மாணவ-மாணவிகள் படிப்பு மட்டுமின்றி உடல்நலத்திலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர், ஆசிரியர்கள் மாணவர்களின் உடல்நலம் மற்றும் படிப்பில் அதிக அக்கறையுடன் நடந்து கொள்ளவேண்டும். வாழ்க்கையில் உயர ஒரே வழி படிப்புதான். கல்வி செல்வம் என்பது நிலையானது என்பதை மாணவர்கள் உணர்ந்து படிக்க வேண்டும்.

சமுதாயத்தில் ஒரு நல்ல மனிதனாக வாழ பள்ளிக்கல்வி மிகவும் அவசியம்.

உணவு சாப்பிட்ட பிறகு

மாவட்டத்தில் 1 முதல் 19 வயது வரை உள்ள 4 லட்சத்து 48 ஆயிரத்து 969 பேருக்கும் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட 1 லட்சத்து ஆயிரத்து 795 பெண்களுக்கும் என மொத்தம் 5 லட்சத்து 50 ஆயிரத்து 764 பேருக்கு அல்பெண்டாசோல் மாத்திரை வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்