2½ லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

நீலகிரியில் 2½ லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாமை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

Update: 2022-09-09 15:10 GMT

ஊட்டி, 

நீலகிரியில் 2½ லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாமை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

அங்கன்வாடி மையங்கள்

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பிங்கர்போஸ்ட் அங்கன்வாடி மையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் நடந்தது. கலெக்டர் அம்ரித் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-

குடற்புழு நீக்க மாத்திரை 1 வயது முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கும், 20 வயது முதல் 30 வயது வரை உள்ள கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அல்லாத பெண்களுக்கும், பள்ளி செல்லா குழந்தைகளுக்கும் அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படுகிறது. அனைத்து அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மற்றும் 415 அங்கன்வாடி பணியாளர்கள், 216 கிராம சுகாதார செவிலியர்கள், 409 ஆஷா பணியாளர்கள் மூலம் நேரடியாக வழங்கப்படுகிறது.

உடல் ஆரோக்கியம்

நீலகிரி மாவட்டத்தில் 2 லட்சத்து 30 ஆயிரத்து 869 குழந்தைகளும், 20 வயது முதல் 30 வயது வரை உள்ள கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அல்லாத பெண்கள் 52 ஆயிரத்து 982 பேர் பயன் பெறுவார்கள். அல்பெண்டசோல் மாத்திரையை உட்கொள்வதால் குடற்புழு நீக்கம் செய்யப்படுவதுடன், ரத்த சோகை நீங்கி நன்றாக உணவு உட்கொள்ளவும், குழந்தைகள் மற்றும் தகுதி வாய்ந்த பெண்கள் உடல் ஆரோக்கியம் பெறவும் உதவுகிறது. குடற்புழு நீக்க மாத்திரைகள் விடுபட்டவர்களுக்கு வருகிற 16-ந் தேதி வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார். மேலும் கலெக்டர் கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தங்களது நண்பர்கள், உறவினர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருந்தால், அவர்களை தடுப்பூசி செலுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்