பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்; நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்

வார விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் நேற்று பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

Update: 2023-06-25 21:00 GMT

வார விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் நேற்று பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

அலைமோதிய பக்தர்கள்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

குறிப்பாக மாத கார்த்திகை, வாரவிடுமுறை, முகூர்த்தம் உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்படும். அந்தவகையில் நேற்று வாரவிடுமுறை என்பதால், பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

காத்திருந்து தரிசனம்

அதிகாலை முதலே அடிவாரம் பாதவிநாயகர் கோவில், திருஆவினன்குடி, மலைக்கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் குவிந்தனர். மேலும் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்வதற்கான ரோப்கார், மின்இழுவை ரெயில்நிலையம் ஆகிய இடங்களில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.

இதேபோல் மலைக்கோவிலில் உள்ள பொது, கட்டண தரிசன வழிகளிலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். சுமார் 2 மணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

'சர்வர்' பிரச்சினை

பழனிக்கு வரும் பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக திருஆவினன்குடி, வடக்கு கிரிவீதி, மேற்கு கிரிவீதி உள்ளிட்ட இடங்களில் முடிக்காணிக்கை நிலையங்கள் உள்ளன.

இங்கு எவ்வித கட்டணம் இல்லாவிட்டாலும் உரிய சீட்டு பெற்ற பின்பே முடிக்காணிக்கை செலுத்த முடியும். நேற்று வாரவிடுமுறை என்பதால் முடிக்காணிக்கை செலுத்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்தனர்.

இந்தநிலையில் காலை 8.30 மணி அளவில் திடீரென திருஆவினன்குடி முடிக்காணிக்கை நிலையத்தில் 'சர்வர்' பிரச்சினை ஏற்பட்டது. இதனால் அங்கு முடிக்காணிக்கை சீட்டுகள் வழங்க முடியவில்லை. இதனால் அங்கு வந்த பக்தர்கள் வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

சுமார் ¾ மணி நேரத்துக்கு பின் 'சர்வர்' பிரச்சினை சரிசெய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து முடிக்காணிக்கை சீட்டுகள் வழங்கப்பட்டது. இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, முடிக்காணிக்கை நிலையத்தில் கடந்த சில நாட்களாக 'சர்வர்' பிரச்சினை அடிக்கடி ஏற்படுகிறது. இதற்கு உரிய தீர்வு காண கோவில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்