வாரவிடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்

வாரவிடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

Update: 2023-08-06 20:21 GMT

உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். மாத கிருத்திகை, சஷ்டி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்கள் வருகை அதிகரிப்பது வழக்கம். குறிப்பாக வார விடுமுறை நாட்களில் கேரளா உள்ளிட்ட வெளிமாநில பக்தர்கள் அதிகளவில் பழனிக்கு வந்து முருகப்பெருமானை தரிசித்து செல்கின்றனர்.

அந்தவகையில் வார விடுமுறையையொட்டி நேற்று காலை முதலே பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர். பஸ், கார், வேன்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வந்தனர். இவ்வாறு வந்த பக்தர்கள் படிப்பாதை, யானைப்பாதை மற்றும் ரோப்கார், மின்இழுவை ரெயில் வழியாக மலைக்கோவிலுக்கு சென்றனர்.

பக்தர்கள் வருகையையொட்டி கோவில் வெளிப்பிரகாரம், உட்பிரகாரம் ஆகிய இடங்களில் கூட்டம் அலைமோதியது. மேலும் சன்னதிக்கு செல்லும் பொது, கட்டண தரிசன வழிகளில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்திருந்தனர். சுமார் 1½ மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நேற்று பகல் முழுவதும் கடும் வெயில் நிலவியதால், வரிசையில் நின்ற பக்தர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

Tags:    

மேலும் செய்திகள்