பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி குமரி மாவட்ட பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-09-24 23:31 GMT

நாகர்கோவில்:

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி குமரி மாவட்ட பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

புரட்டாசி சனிக்கிழமை

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக சொல்லப்படுகிறது. அதிலும் புரட்டாசி சனிக்கிழமையில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் துன்பங்கள் நீங்கி ஆனந்தம் கிடைக்கும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. இதன் காரணமாக புரட்டாசி மாத சனிக்கிழமை அன்று பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

அந்த வகையில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான நேற்று குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு தீபாராதனை, அபிஷேகம் ஆகியவை நடந்தது. இந்த பூஜைகளில் பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வந்து கலந்து கொண்டனர். இதனால் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

பெருமாள் கோவில்களில் கூட்டம்

அதாவது நாகர்கோவில் வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் அமைந்துள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவில், திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவில், பறக்கை மதுசூதன பெருமாள் கோவில், சுசீந்திரம் துவாரகை கிருஷ்ணன் கோவில், நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் உள்ள கிருஷ்ணசாமி கோவில், கோட்டார் வாகையடி தெருவில் உள்ள ஏழகரம் பெருமாள் கோவில், வட்டவிளை தென்திருப்பதி வெங்கடாசலபதி கோவில் உள்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

இடர் தீர்த்த பெருமாள்

நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற பெருமாள் கோவிலான வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின்னர் சாமிக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தன. அதன்பிறகு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன.

முன்னதாக பெருமாளை தரிசிப்பதற்காக ஏராளமான ஆண்களும், பெண்களும் கோவிலில் குவிந்தனர். இதனால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர். அப்போது பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது.

திருவட்டார்

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் காலை சிறப்பு பூஜைகளைத்தொடர்ந்து மதியம் ஸ்ரீபலி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் ஆதிகேசவப்பெருமாளின் திருமேனியில் விழும் நிகழ்வு ஆகியன நடந்தது.

இதனை காண ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதே சமயத்தில் புரட்டாசி சனிக்கிழமை என்பதால் வழக்கத்தை விட ஏராளமான பக்தர்கள் வருகை தந்து நீண்டவரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

கிருஷ்ணன் சன்னதியில் முழுக்காப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து ஆதிகேசவ சேவா சங்க டிரஸ்ட் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்