விருத்தாசலத்தில்சுயம்புமுத்து மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் ஊர்வலம்
விருத்தாசலத்தில் சுயம்புமுத்து மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது.
விருத்தாசலம்,
விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டையில் சுயம்பு முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 20 -ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து, மகாதீபாராதனை நடந்து வருகிறது.
நேற்று காலையில் சக்தி கரகம் அழைத்து விருத்தாசலம் மணிமுத்தாற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி, வேப்பிலை கரகம் ஏந்தியும், ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும் கோவிலுக்கு ஊா்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்து, மகா தீபாராதனை நடைபெற்று, சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மாலையில் அகல் விளக்கேற்றி சிறப்பு பூஜை நடந்தது. இரவு அம்மன் தாலாட்டும், அம்மனுக்கு விடையாற்றி உற்சவமும், காத்தவராயனுக்கு கும்ப படையல் நிகழ்ச்சியும் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.