முருகர் கோவிலுக்கு காவடி எடுத்து சென்ற பக்தர்கள்
ஆடி கிருத்திகையையொட்டி முருகர் கோவிலுக்கு பக்தர்கள் காவடி எடுத்து சென்றனர்.
முருகர் கோவில்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) பரணி கிருத்திகையும், நாளை (புதன்கிழமை) ஆடி கிருத்திகை திருவிழாவும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பக்தர்கள் விரதமிருந்து பல்வேறு காவடி எடுத்து திருத்தணி, வள்ளிமலை, ரத்தினகிரி உள்ளிட்ட முருகன் கோவிலுக்கு வேலூர் வழியாக நடந்து சென்றனர். அவர்களுக்கு பல பகுதிகளில் பொதுமக்கள் உணவு, குடிநீர், மோர் உள்ளிட்டவற்றை வழங்கினர்.
வேலூர் தோட்டப்பாளையத்தில் உள்ள நாராயண ரெட்டியார் சத்திரத்தில் நேற்று 2-வது நாளாக 1,000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் அணைக்கட்டு, பள்ளிகொண்டா பகுதிகளிலிருந்து நடந்து வந்த பக்தர்கள் சத்திரத்தில் சாப்பிட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்து பின்னர் முருகன் கோவிலுக்கு புறப்பட்டனர்.
மேலும் திருத்தணி, வள்ளிமலை ரத்தினகிரி, பாலமதி, முத்துக்குமரன் மலை, கைலாசகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று காலை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் பக்தர்கள் பலர் பயணம் செய்தனர். காலை வேளையில் பக்தர்கள் கூட்டம் குறைவாகவும், மாலை வேளையில் சிறிதளவு கூட்டம் அதிகரித்தும் காணப்பட்டது.
ஆடி கிருத்திகையையொட்டி முருகன் கோவில்கள் மற்றும் நடந்து செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் 800 போலீசார் ஈடுபட உள்ளனர் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.