கோவில் வளாகத்தில் பக்தர்கள் உள்ளிருப்பு போராட்டம்

ஏர்வாடி ரத வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தேரோட்டம் நடத்த வலியுறுத்தி, திருவழுதீஸ்வரர் கோவில் வளாகத்தில் பக்தர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-05-30 20:04 GMT

ஏர்வாடி:

ஏர்வாடி ரத வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தேரோட்டம் நடத்த வலியுறுத்தி, திருவழுதீஸ்வரர் கோவில் வளாகத்தில் பக்தர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரத வீதிகளில் ஆக்கிரமிப்புகள்

ஏர்வாடியில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த திருவழுதீஸ்வரர் பெரியநாயகி அம்பாள் கோவிலில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 42 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு ேதரோட்ட திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

எனவே பழைய சேதமடைந்த தேருக்கு பதிலாக, ரூ.1 கோடியில் புதிய தேர் செய்யப்பட்டு, கடந்த மாதம் 15-ந்தேதி வெள்ளோட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கிடையே ரத வீதிகளில் உள்ள கடைகள், வீடுகளின் ஆக்கிரமிப்புகளால் தேர் வெள்ளோட்டம் ரத்து செய்யப்பட்டது.

பக்தர்கள் உள்ளிருப்பு போராட்டம்

இந்த நிலையில் ரத வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். ஆனால் திட்டமிட்டபடி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள், பக்தர்கள் நேற்று காலையில் திருவழுதீஸ்வரர் கோவில் வளாகத்தில் அமர்ந்து திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரத வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தேரோட்டம் நடத்த வேண்டும். தேர் வெள்ளோட்டம் நடைபெறும் வரையிலும் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர். கோவில் வளாகத்தில் சிவனடியார்கள் திருவாசக பாடல்களை பாடினர். போராட்டத்தில் இந்து முன்னணி, விசுவ இந்து பரிஷத், பா.ஜனதாவினரும் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தை

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா, நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டு ரஜத் சதுர்வேதி, ஏர்வாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதம் அலி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து மாலையில் போராட்டத்தை கைவிட்ட பக்தர்கள், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்