தியாகதுருகம் அருகே புற்றுமாரியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
தியாகதுருகம் அருகே புற்றுமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தியாகதுருகம்,
தியாகதுருகம் அருகே பல்லகச்சேரி கிராமத்தில் பிரசித்தி பெற்ற புற்றுமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 22-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சாமிக்கு சிறப்பு பூஜையும், சாமி வீதி உலாவும் நடைபெற்றது. மேலும் அம்மனுக்கு பொங்கல் வைத்தல், பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் சிறப்பு அலங்காரத்தில் புற்றுமாரியம்மன் எழுந்தருளினார். தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு, தேரோட்டம் தொடங்கியது. தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேரானது கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் நிலையை வந்தடைந்தது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. விழாவில் தியாக துருகம் ஒன்றியக்குழு தலைவர் தாமோதரன், துணை தலைவர் நெடுஞ்செழியன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.