ராமேசுவரம் கோவிலுக்கு தள்ளு வண்டியில் செல்லும் பக்தர்கள்
ராமேசுவரம் வரும் பக்தர்களுக்கு போதிய பேட்டரி கார்கள் இல்லாததால் பக்தர்கள் தள்ளு வண்டியில் அமர்ந்து செல்லும் அவல நிலை காணப்படுகிறது.
ராமேசுவரம்,
அரசு அதிகாரிகள்
அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலின் ரத வீதி சாலைகளுக்குள் அரசு பஸ் உள்ளிட்ட எந்த ஒரு வாகனகங்களும் செல்லக்கூடாது என்று கோர்ட்டு உத்தரவு உள்ளது.
இந்த நிலையில் அரசு அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் வரும் அனைத்து வாகனங்களுமே கோவிலில் கிழக்கு வாசல் வரையிலும் வந்து நிறுத்தப்படுகிறது. மீண்டும் ரத வீதி சாலை வழியாகவே அந்த வாகனங்கள் செல்கிறது.
பக்தர்கள் சிரமம்
இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரத வீதி சாலையில் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். மேலும், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் செல்ல கோவில் நிர்வாகம் சார்பில் கூடுதலாக பேட்டரி கார்களும் இயக்கப்படவில்லை. பெயரளவில் ஒரே ஒரு பேட்டரி கார் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
இதை தவிர பசுமை ராமேசுவரம் திட்டத்தின் மூலம் கட்டண அடிப்படையில் சிறிய பேட்டரி வாகனம் 3 இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் தள்ளுவண்டிகளில் அமர்ந்து கோவிலுக்கு சென்று வரும் அவல நிலை காணப்படுகிறது.
பக்தர்கள் கோரிக்கை
சராசரியாக ஒரு நாளைக்கு 10 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் பேர் வரை ராமேசுவரம் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். மாதம் உண்டியல் வருமானம் ஒன்றரை கோடிக்கு மேல் வருகின்றது. இவ்வளவு உண்டியல் வருமானம் வருகின்ற போதிலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக கூடுதலாக பேட்டரி கார்கள் இயக்க கோவில் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதுபோல் ரதவீதிகளில் எப்படி அனைத்து வாகனங்களும் செல்ல தடை உள்ளதோ, அதேபோல் அரசுத்துறை அதிகாரிகள் குடும்பத்தினர் வரும் வாகனங்களையும் செல்ல போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வேண்டும் என பக்தர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.