பழனி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்

பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மலைக்கோவிலில் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

Update: 2023-07-02 19:45 GMT

அலைமோதிய பக்தர்கள்

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்தநிலையில் வாரவிடுமுறையையொட்டி நேற்று பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

அதிகாலை முதலே அடிவாரம் பாதவிநாயகர் கோவில், மலைக்கோவில், திருஆவினன்குடி கோவில், கிரிவீதிகளில் பக்தர்கள் குவிந்தனர். கோவிலில் உள்ள பொது, கட்டணம் மற்றும் கட்டளை தரிசன வழியாக சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

இதேபோல் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்லும் படிப்பாதை, யானைப்பாதை ஆகிய இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

மேலும் ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய நிலையங்களிலும் வெகுநேரம் காத்திருந்து டிக்கெட் பெற்று பக்தர்கள் சென்றனர். நீண்ட வரிசையில், 2 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

108 சங்கு பூஜை

பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாத கேட்டை நட்சத்திர நாளில் அன்னாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். மழைவளம் பெருகவும், உலக நலன் வேண்டியும், பசி, பிணி இன்றி மக்கள் வாழவும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான அன்னாபிஷேக நிகழ்ச்சி பழனி முருகன் கோவிலில் நேற்று நடந்தது.

முன்னதாக கோவில் மண்டபத்தில் தங்க சப்பரத்தில் 3 கலசங்களில் புனிதநீர், 108 வலம்புரி சங்குகளில் புண்ணிய தல தீர்த்தம் ஆகியவை வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், கலச பூஜை நடந்தது.

இதைத்தொடர்ந்து கந்த ஹோமம், பூர்ணாகுதி நடைபெற்று, கலசங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. அதன்பிறகு கலசங்கள், 108 வலம்புரி சங்குகளை கோவில் உட்பிரகாரம் சுற்றி வந்து மூலவர் சன்னதிக்கு கொண்டு வரப்பட்டது.

அன்னாபிஷேகம்

தொடர்ந்து உச்சிக்கால பூஜையில் மூலவருக்கு 16 வகை அபிஷேகம், கலச அபிஷேகம், 108 வலம்புரி சங்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அன்னத்தால் மூலவருக்கு அலங்காரம் செய்யப்பட்டு, கிரீடம் வைக்கப்பட்டது. தொடர்ந்து 16 வகை தீபாராதனை காட்டப்பட்டது. முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், மணிமாறன், ராஜசேகரன், இணை ஆணையர் மாரிமுத்து, சித்தனாதன் சன்ஸ் நிறுவன உரிமையாளர்கள் சிவனேசன், தனசேகர், பழனிவேலு, ராகவன், அசோக், செந்தில், கார்த்திக், குமரகுரு உள்பட பலர் கலந்துகொண்டனர். பூஜை ஏற்பாடுகள் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணியம் மற்றும் கோவில் குருக்கள், மிராஸ் பண்டாரங்கள் செய்து இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்