பழனி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்
அக்னி நட்சத்திர கழு திருவிழா நிறைவுநாளையொட்டி பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கழுதிருவிழா நிறைவு நாள்
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில், கோடை காலத்தில் கொண்டாப்படும் அக்னி நட்சத்திர கழு திருவிழா கடந்த 8-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி உள்ளூர் மட்டுமன்றி வெளியூர் பக்தர்கள் பழனியில் காலை, மாலை வேளையில் கிரிவலம் வந்து வழிபட்டனர்.
அதேபோல் ஏராளமான பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். இந்நிலையில் வாரவிடுமுறை மற்றும் அக்னி நட்சத்திர கழு திருவிழாவின் இறுதிநாளான நேற்று பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காலை, மாலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனி மலையை சுற்றி கிரிவலம் வந்தனர்.
3 மணி நேரம் காத்திருப்பு
அப்போது பெண்கள் பலர் கடம்ப மலர்களை தலையில் சூடிக்கொண்டும், கையில் ஏந்தியும் சென்றனர். பக்தர்கள் குவிந்ததால் அடிவாரம், மலைக்கோவில், திருஆவினன்குடி ஆகிய பகுதிகளில் பக்தர்கள் தலைகளாகவே தென்பட்டன.
இதேபோல் மலைக்கோவில் செல்வதற்கான பாதைகள், தரிசன வழிகள் என அனைத்து இடங்களிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அதன்படி ரோப்கார், மின்இழுவை ரெயில், தரிசன வழிகளில் கூட்டம் அதிகமாக இருந்ததால், சுமார் 3 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பழனியில் நேற்று பகல் முழுவதும் கடும் வெயில் சுட்டெரித்ததால் பக்தர்கள் மிகவும் அவதிப்பட்டனர்.